மகிந்தவின் இந்தியப் பயணம் தொடர்பில் தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். பொதுமக்களின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
எமது தேசத்தில் தமிழ் மக்கள் மீதான மனிதவதை இப்போது உச்சத்தாண்டவம் ஆடுகின்றது. காலங்காலமாகத் தமிழின அழிப்பையே கையிலெடுத்து அரியாசனமேறி, ஆட்சி நடத்தும் சிங்கள இனவெறித் தலைவர்களின் வழிவந்த மகிந்த ராஜபக்ச, தனது இனத்தின் 85 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆசீர்வாதத்தோடு உச்சக்கட்ட மனித வதையை எம்மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் எம்மவர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், கோவில்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் சுட்டுக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்களாகக் கிடக்கின்றார்கள். பாதுகாப்புத் தேடி வேறு வழியற்று சிறைச்சாலைகளில் தஞ்சம் புகுகின்றார்கள்.
எமது பெண்கள் சிங்களப் படைச் சிப்பாய்களின் காமவெறிக்கு இரையாக்கப்படுகின்றார்கள்.
இன்று யாழ்ப்பாணக் குடாநாடு சிறிலங்காவின் ஒரு சிறைச்சாலை. உலகத்தில் மனித வதைகளுக்குப் புகழ்பெற்ற பல்வேறு சிறைச்சாலைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றிற்கு எந்த வகையிலும் குறைந்துவிடாத அல்லது அதற்கும் மேலான வதைகள் நடக்கும் சிறைச்சாலையொன்றில் நாங்கள் வாழ்கின்றோம்.
எங்களைச் சுற்றிலும் 40,000-க்கும் மேற்பட்ட இனவெறிச் சிப்பாய்கள் நவீன ஆயுதங்கள் தாங்கி நிற்கின்றன.
வீதிகள் தோறும், ஊர்கள் தோறும் நெருக்கமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்மைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு மனிதத் தன்மையற்ற பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எம்மை பல்வேறு வழிகளாலும் அழித்தொழிப்பதையே அவர்கள் தினந்தோறும் செய்து வருகின்றார்கள்.
கடந்த இரு மாதத்தில் வெளித்தெரிய வந்த தகவல்களின்படி மட்டும் எம்மில் 59 பேர் கொல்லப்பட்டார்கள். 37-க்கும் மேற்பட்டோர் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டு விட்டார்கள். உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் தினந்தேறும் குடும்பமாகவும் தனித்தனியாகவும் சிறைச்சாலைகளில் தஞ்சமடைவோர் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அங்கும் அவர்கள் சிறிலங்கா அதிகாரிகளாலும், காவல்துறையினராலும் மோசமாக வதைக்கப்படுகிறார்கள்.
எமது வதையின் கதை இப்படியிருக்க கிழக்கு மாகாணத்திலே எமது உறவுகளின் நிலையோ வார்த்தைகளுக்குள் உட்படுத்த முடியாது கோரமாக உள்ளது.
அங்கு அவர்களது சமூகக் கட்டுமானங்கள் யாவும் உடைக்கப்பட்டு எந்தவிதமான தகவல்களும் வெளிவராதவாறு செய்யப்பட்ட நிலையில் இனவெறியாட்டம் நடக்கிறது. தமிழ் மக்களின் உயிர்கள் வகை தொகையின்றி உறிஞ்சப்படுகின்றன. வீடுகள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் காணிகள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படுகின்றன. வதையுறும் அம் மக்களின் அவலக்குரல் எவருக்கும் கேட்கவே இல்லை.
சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சிறிலங்காவின் தலைநகரில் கூட தமிழர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் கூட இதற்கு விதிவிலக்காகவில்லை. இதனைவிட அங்கும் தமிழர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், அவர்களது பணம் வருத்திப் பறிக்கப்படுகிறது. அண்மையில் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக ஒரு இரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதிலிருந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றத்துடன் அவர்கள் வாழ்வும் நகர்கிறது.
எம்மீது இத்தனை கொடூரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிறிலங்காத் தலைவர் ஆறு கோடி தமிழர்கள் வாழும் மண்ணில் மீண்டும் ஒருமுறை காலடி எடுத்து வைக்க இருக்கிறார். எம்மை அழிப்பதற்கான கருத்தியல் ஆதரவோ, பொருளாதார ஆதரவோ, படைக்கல உதவிகளோ தேவைப்படும் போதெல்லாம் அவர் ஓடோடி வரும் முதல் நாடாக இந்தியா இருப்பது தான் எம்மை மீளாத வேதனையுள் ஆழ்த்தியுள்ளது.
இத்தனை காலமும் எம்மீதான அழிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சிறிலங்காவிற்கு உதவி வந்தன. ஆனால், தற்போது மகிந்த அரசின் மனித வெறியாட்டக் கோரங்கள் அப்பட்டமாக வெளிவந்த நிலையில் அந்நாடுகள் சங்கடத்திற்கு உள்ளாகி நிற்கின்றன. சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் என சர்வதேச சமூகமே ஒன்றிணைந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நிற்கின்றன. அதனால் வெளிப்படையான படைத்துறை உதவிகளைக் கூட பலவேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. அமெரிக்கா நாடு கூட சிறிலங்காவிற்குப் படைத்துறை உதவிகளை நிறுத்தவுள்ளதான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட சர்வதேச மட்டத்திலான பயணங்களை மேற்கொண்டு தனது கொடூரமுகத்தை மூடிமறைக்கப்படாத பாடுபட்ட மகிந்த அவற்றில் பாரிய தோல்வியையே சந்த்தித்தார்.
சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சிங்களத்தலைவர் தனது தமிழின அழிப்பிற்கு உதவி கோரி இப்போது உங்களது தேசத்திற்கு வந்திருக்கிறார். எப்போதும் போல இந்தியாவை ஏமாற்றித் தனக்கான உதவிகளைப் பெற்றுவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை அவருக்கு உண்டு.
"எங்களுக்கு உலகில் எவருமில்லை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆறுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள்" என்று எப்போதும் சிங்களவர்கள் கூறிக்கொள்வார்கள். நாமும் இங்கு துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்கு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மனதைத் தேற்றிக்கொள்வோம்.
என்றோ ஒரு நாள் எங்களுக்காகப் பொங்கியெழுந்து வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எஞ்சிய உயிரைப் பிடித்தபடி இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம். ஆனால், அப்பட்டமான மனித வதைகளுக்காக அமெரிக்காவின் முகத்தில் முழிப்பதற்கே திண்டாடும் சிங்களத் தலைவர் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்திய மண்ணிற்குத் தேவைப்படும் போதெல்லாம் வந்து ஆதரவுபெற்று வருவது எம்மைத் துயரத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது.
நாம் எமது உயிரினும் மேலாக நேசிக்கும் எமது உறவுகளே! தமிழர்கள் என்பதற்காக எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள், குழந்தைகள் பட்டினி போடப்படுகிறார்கள், இளைஞர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். அல்லது அதற்காக எங்கோ கடத்திச் செல்லப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களிலிருந்து எதுவுமற்ற ஏதிலிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எமது இனமே அழித்தொழிக்கப்படும் நிலையிலுள்ளது. எமது அழிவிற்கான ஆதரவும் உதவிகளும் நீங்கள் வாழும் பாரத தேசத்திலிருந்து எமது கொலையாளிகளின் கைகளுக்குக் கிட்டுவதை நாம் ஆத்மார்த்தமாக விரும்பவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/index.php?cn=33788