Tuesday, September 4, 2007

ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை

படுகொலைகளும் மனிதவுரிமை மீறல்களும் சாதாரணமாக நடந்துவரும் இலங்கையின் பக்கம் சர்வதேசத்தினதும் மனிதவுரிமை ஆர்வலர்களினதும் பார்வை திரும்பி இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்தே வருகின்றது. இவ்வளவு காலமும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நடத்தி வந்தபோதும், அதனை கண்டிக்க எந்த அமைப்போ அல்லது நாடுகளோ மனதார முன்வரவில்லை தம் பிராந்திய நலனுகாகவும் தம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் படுகொலைகளையும் மனிதவுரிமைகளையும் அடக்கு முறைகளையும் கண்டும் காணாதது போல் இருந்தே வந்தன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அடக்கு முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நாடுகளே, இன்னொரு அடக்கப்படும் இனத்தின் விடுதலைகாய் காத்திரமான பங்களிப்பை வழங்காதது கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.

தற்போது ஐ.நா.வின் பங்களிப்பும் கரிசனையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கி இருப்பது, சிங்கள இனவாதிகளுக்கு கசப்பான செய்தியே. தம் பிரதிநிதியை ஐ.நா. செயலாலராக்க எடுத்த முயற்சியில் இலங்கை அரசு படு தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல தம் இனப்படுகொலைகளையும் தமிழினத்தின் மேலான அடக்கு முறையையும் உலகுக்கு மறைக்கும் முயற்சியில் தோல்வியுற்று உள்ளது என்பது மிகப்பொருந்தும். தமிழினத்தை பயங்கரவாதிகளாக சித்தரித்த இலங்கையின் உண்மை முகம் வெளிப்படதொடங்கி இருக்கின்றது. இதற்கு புலிகளின் ராஜதந்திர நகர்வுகளும், புலம் பெயர் மக்களின் முயற்சியும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் என சொல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சரின் செயளாளருமான கோத்தபாய ராஜபக்ஸ ரொயிட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நாவில் புலிகள் ஊடுறுவி இருக்கின்றார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இவ் பேட்டியானது ஒரு உயர் ராஜதந்திரி ஒருவரின் பொருப்பற்ற செயலையே காட்டி நிற்கின்றது. ஐ.நா.வை சாடுவது இது முதல் முறை அல்ல. ஒரு முறை லக்ஸ்மன் கதிர்காமர் கூட ஐ.நா. கொசு மருந்தடிக்கும் வேலையை மட்டும் பார்க்கட்டும் என ஏளனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது போக அண்மையில் இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரான ஜெயராஞ் பெனான்டோ பிள்ளை ஐ.நா. அதிகாரியான ஜோன் கோல்மஸ் அவர்களை புலிகளிடம் பணம் வாங்கிய ஒரு பயங்கரவாதி என விமர்சித்துள்ளதானது இலங்கை அரசின் ஐ.நா. மீதான காழ்புனர்ச்சியையும் சிறீலங்கா அரசின் இயலாமையையும் தெளிவாக காட்டுகின்றது. தமக்கு ஆதரவாக அறிக்கை விடும் அதிகாரிகள் நல்லவர்கள் மற்றையவர்கள் பயங்கரவாதிகள், பணம் வாங்கிய ஊழல் பேர்வளிகள் என பொருள்படும் விதமாக கருத்தினை தெரிவித்து வருவது குறிப்பிட தக்கது

அப்படிப்பட்ட காட்டமான அறிக்கைகளையும், கோமாளித்தனமான கருத்துகளையும் சிறீல‌ங்கா அர‌சிய‌ல்வாதிக‌ள் வெளியீட்டு வ‌ந்தபோதும் ஐக்கியநாடுகள் அதனைக்கேட்டு பொங்கி எழுந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக தம் பக்க சார்பில் காரசாரமாக எந்தவொரு கண்டனத்தையோ, கண்டிப்பையோ காட்டாமல் மெளனம் சாதிக்கின்றனர். அத‌ன் ந‌டைமுறை செயற்பாடுகளில் எந்த‌ மாற்ற‌மும் இல்லாம‌லே ஐ.நா. இய‌ங்குவ‌து வேத‌னைக்குரிய‌து. த‌ன் தூதுவ‌ர் ஒருவ‌ரையே க‌பின‌ட் அமைச்ச‌ர் ஒருவ‌ர் கையூட்டு பெற்ற‌வ‌ர் என‌ விம‌ர்சிக்கும் அதே த‌ருண‌த்தில் ஐ.நாடுகள் எத்த‌கைய‌ ஒத்துழைப்பையும் தாம் வ‌ழ‌ங்க‌ த‌யாராக‌ இருக்கின்றோம் என‌ அறிக்கைக‌ளை விடுத்து கொண்டு, பெய‌ருக்கு ம‌ட்டும் அறிக்கைக‌ளை விடுத்து த‌ன்னைத்தானே சிறுமைப்ப‌டுத்துகின்ற‌து ஐ.நா. என‌ எண்ண‌த் தோன்றுகின்ற‌து. வேறு நாடுக‌ளில் இதே போன்ற‌ ஒரு பிர‌ச்சினை வ‌ந்திருந்தால் இதேபோல‌ அறிக்கைக‌ளை ம‌ட்டும் விடுத்திருக்குமா ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பை.

க‌ட‌ந்த‌வார‌ம் நில‌வ‌ர‌ம் நிக‌ழ்சியில் புலிக‌ளின் ப‌டைத்துறை பேச்சாள‌ர் ராசையா இள‌ந்திரைய‌ன் அவ‌ர்க‌ள் ஜ‌நாவின் செய‌ற்பாடுக‌ளில் இருக்கும் தொய்வுக‌ளை ந‌ன்கு சுட்டி காட்டி இருந்தார்.
ஐ.நா. விசேட‌ தூதுவர் ஐ.நாடுகளுக்குள் ஊடுறு தவறான தகவல்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ஐ.நா. பணியாளர்களின் நிலை, இன்னும் நாட்க‌ள் செல்ல‌ ஐ.நாவே புலிக‌ளின் துணை அமைப்பு என‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் அறிக்கை விடும் தூர‌ம் அதிக‌ தூர‌த்தில் இல்லை.


சிறீலங்கா அரசு, ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக் காட்டியுள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால், தனது அரச பயங்கரவாதச் செயல்களை நாளாந்தம் நடாத்திக் கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தியடிக்கின்ற சிங்களச் சிறிலங்கா அரசு, இன்று தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் விரட்டியடிக்கின்றது.

இத்தகைய கொடூரங்களைத் தடுத்து நிறுத்துவதற்கோ, குற்றமிழைப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ யாரும் முன் வராத நிலையில், இலங்கை அரசின் இனவாத அத்துமீறல்கள், அட்டுழியங்கள் தொடர்ந்த வண்ணமே, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளும் நேரடியாகத் தலையிட்டு, பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என சுட்டிக் காட்டுகின்றது மனித உரிமைகள் ஆணைக்குழு.
இந்த மனித ஆணைக்குழுவின் சுட்டிக்காட்டலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலை சாய்க்குமா அல்லது பேசாமடந்தைகளாக மெளனம் சாதிப்பார்களா?

No comments: