இந்த ஆக்கம் என்னுடையது அல்ல யாழ் கள உறுப்பினர் கலைஞனின் சொந்த கதை இதனை இங்கு வெளியிட அனுமதித்த கலைஞனுக்கு மிக்க நன்றி
சிறீலங்கா சிறையில் என் சொந்த அனுபவங்கள்- கலைஞன்
கொழும்புக்கு வந்திறங்கி சுமார் ஒரு கிழமைதான் ஆகியிருந்தது. அன்று காலை டமார் என்று ஒரு குண்டு தூரத்தில் வெடித்து கேட்டது! இரவைக்கு பொலிஸ் வரப்போறான். அயிடன்ட்டிக் கார்ட்டுடனும் பொலிஸ் கேட்கும் கேள்விகளிற்கு பதில்கூறுவதற்கும் ஆயத்தமாக இருக்கும்படி வீட்டுஓனரால் எனக்கு அறிவுரை தரப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில்(1990 - 2000) சிறீ லங்கா அரசால் கொழும்பில் வாழும் தமிழர்மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இயல்பாகவே கொழும்பில் வாழ்பவர்களிற்கு பொதுவாக மற்றவர்களிற்கு உதவிசெய்ய வேண்டும் எனும் குணம் அறவே கிடையாது. சிறீ லங்கா அரசும் தமிழர் மீது கட்டுப்பாடுகளை விதித்துவிட இவர்கள் தமது உறவுகள் தமிழீழ தேசத்திலிருந்து கொழும்புக்கு வரும்போது சும்மா ஒருமுறை வந்து முகம் காட்டுவதற்கே பஞ்சிப்பட்டார்கள். பொலிஸ் பிரச்சனை, இராணுவ வீதிச் சோதனைகள் என்று சாட்டுக்கள் கூறி புதிதாக வந்தவர்களை வெட்டிவிட்டார்கள்.
இதற்கு உதாரணமாக நான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை கூறிவிட்டு விடயத்திற்கு வருகிறேன். எனக்கு (சிறையால் விடுதலையடைந்த பின்) தொழில் சம்பந்தமாக கொழும்பில் ஒரு செல்வந்தர் வீட்டினுள் செல்லவேண்டி வந்தது. அப்போது வீட்டுத்தலைவி தனது உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரது உறவினர் இவ்வாறு கூறினார் "உங்கட அவேள் ஜவ்னாவிலிருந்து கொழும்புக்கு வந்து 02 கிழமையாச்சு, எப்ப போய் சொந்தக்காரரை சந்திக்கப்போறீங்கள்?" வீட்டுக்காரி இவ்வாறு பதில் சொன்னார் "நாங்கள் எப்பிடியப்பா போறது? அவேள் எங்கையோ லொட்சிலையாம் இருக்கிறீனம்! நான் எப்படியப்பா இவரையும் கூட்டிக்கொண்டு லொட்சுக்கு போறது?" இவ்வளவிற்கும் 24 மணித்தியாலமும் செல்வந்தர் குடும்பம் அழகிய ஆடம்பர காரில் கொழும்பு முழுவதும் உலாத்திக் கொண்டு திரிந்ததை நான் அறிவேன்!
இனிகதைக்கு வருகிறேன். பொலிஸ் இரவைக்கு வரப்போகிறது என வீட்டுஓனர் பூச்சாண்டிகாட்டி விட்டதும் நான் குளிர்சாதனப் பெட்டியுள் வைத்த சிக்கின் ஆகி விட்டேன். கை, கால் உதறத்தொடங்கியது. ஹார்ட்டும் டபக் டபக் தான். நேரத்துடனேயே சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டேன்.
சரியாக நடுச்சாமம் 12.00 மணி சொச்சத்தில் எனது அறைக்கதவு பலமாகத் தட்டப்பட்டது. பொலிஸ் வந்திருக்கிறோம். கதவை உடன் திற என கொச்சைத் தமிழில் கூறப்பட்டு கதவு பலமாகத் தட்டப்பட்டது. லைட்டை போட்டு கதவைத் திறந்தேன். நான்கு பொலிசும் வீட்டு ஓனரும் வாசலில் நின்றார்கள். அயிடன்டிக்கார்ட்டையும், பொலிஸ் ரிப்போர்ட்டையும் கேட்டார்கள். காட்டினேன். பொலிஸ் ஸ்டேசனுக்கு வருமாறும், அங்கு கூட்டிக்கொண்டுபோய் விசாரித்தபின் விடியற்காலையில் விட்டுவிடுவதாகவும் கூறி என்னை தமது பெரிய நாய்பிடிக்கும் வண்டியில் ஏற்றினார்கள்.
வண்டியினுள் ஒரு மாதிரி உள்ளே ஏறிய பின் பார்த்தபோது அதனுள் ஏற்கனவே சுமார் பத்து தமிழர்கள் பிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. எல்லோரும் கப் சிப். ஒருவருடன் இன்னொருவர் கதைகக் கூட இல்லை. இரு பொலிஸ்காரர் தம்முள் ஒரு விலாசம் எழுதப்பட்ட பேப்பரை காட்டி கதைத்த பின் வண்டி அடுத்த தெருவினுள் போய் நின்றது. கிடுகிடு என வண்டியில் இருந்த நான்கு பொலிசார் இறங்கி ஒரு வீட்டை நோக்கி சென்றார்கள். நாம் வண்டியினுள் இருந்து விடுப்பு பார்க்கத் தொடங்கினோம்.
சிறிது நேரத்தில் ஒரு இளம்பெடியனையும், ஒரு பதின்ரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவனையும் பிடித்து இழுத்து வந்தார்கள். சிறுவன் வீரிட்டு கொய்யோ, மைய்யோ என தெரு அதிரும்படி கத்தி அழத் தொடங்கினான். அவனது போராட்டங்களை சகித்துக் கொள்ளமுடியாத ஒரு பொலிசுகாரன் மற்றவனிடம் அவன் சிறுபிள்ளை விட்டுவிடலாம் எனச் சொல்ல சிறுவன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டான். சிறுவன் விடுதலையான சந்தோசத்தில் புளுகத்துடன் வீடு நோக்கி ஓட நமது வண்டி இன்னொரு தெரு நோக்கிச் சென்றது. சுமார் பதினைந்து பொலிஸ்காரர் கைது செய்யப்பட்ட சுமார் ஐந்து தமிழர்களுடன் எமது வண்டிக்காக மற்றைய தெருவில் காத்திருந்தார்கள். எல்லோரும் எமது வண்டியில் ஏறியதும் இறுதியில் பிடிக்கப்பட்ட சுமார் பதினாறு அப்பாவித் தமிழர்களுடன் வண்டி பொலிஸ்டேசன் நோக்கிச் சென்றது.
பொலிஸ்டேசனுக்கு நாங்கள் கூட்டிவரப்பட்ட போது அதிகாலை சுமார் இரண்டு மணியாகி இருந்தது. பொலிஸ்டேசன் அந்த அதிகாலையில் சிலநூறு தமிழ்ச் சனக்கூட்டங்களால் நிறைந்து திருவிழா போல் காட்சியளித்தது. பிடிக்கப்பட்ட நாம் எல்லோரும் ஸ்டேசனுள் கொண்டு போய் அடைக்கப்பட்டோம். கம்பிகளினுள்ளே நாம் இருந்தோம். கம்பிகளிற்கு வெளியே பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் தாய், தந்தைமார், மனைவிமார், சகோதரங்கள் நின்று அழுது கொண்டு இருந்தார்கள். எங்களுடன் சுமார் ஐந்து இளம் தமிழ்ப் பெண்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் மூவர் சத்தமிட்டு அழத்தொடங்கினார்கள். பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் உறவினர்கள் அவர்களிற்கு குடிப்பதற்கு குளிர்பானப்போத்தல்கள், உண்பதற்கு பனிஸ், பாண், வடை போன்றவற்றை வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். திடீரென்று ஒரு பொலிஸ்காரன் சத்தமாக கதைக்கத் தொடங்கினான். உறவினர்கள் எல்லோரையும் காலை எட்டுமணிக்கு பின் வருமாறு சொல்லி இப்போது எல்லோரையும் தங்களது வீடுகளிற்கு போகுமாறு சொன்னான். சனக்கூட்டம் கலைந்து கடைசியில் பிடிக்கப்பட்ட நாமும் பொலிஸ்காரரும் மாத்திரம் ஸ்டேசனுள் இருந்தோம். நித்திரை எனக்கு தூக்கிதூக்கி அடித்தது.
சிறிது நேரத்தில் நாம் ஒவ்வொருவராகக் கூப்பிடப்பட்டு எமது பெயர், அயிடன்டிக்கார்ட் இலக்கம், முகவரி என கேட்கப்பட்டு பதியப்பட்டது. பின் எங்களை - சுமார் இருபத்திரண்டு பேரை ஒரு சிறிய கூண்டினுள் போட்டு அடைத்தார்கள். அந்தக் கூண்டினுள் இருந்த நெரிசல் நல்லூர் தேர்த்திருவிழாவின் போது கோயிலினுள் அனுபவிக்கும் நெரிசலைவிட மோசமாக இருந்தது. நாம் எங்களிடையே கதைக்கத் தொடங்கினோம். மற்றவர்களின் பெயர், ஊர், தொழில், படிப்பு விடயங்களை கேட்டு அறிந்தோம். சில ஆண்கள் வெட்கத்தையும் பாராது அழத் தொடங்கினார்கள். சில வம்பில் பிறந்ததுகள் அந்த துன்பமான நேரத்திலும் ஜோக்குகள் அடிக்கத்தொடங்கினார்கள். எனக்கு அருகில் இருந்தவர் கூண்டினுள் பொலிஸ் சீ.ஐ.டி கூட மாறு வேசத்தில் இருக்கக்கூடும் என்றும் இதனால் மற்றவர்களுடன் ஒன்றும் கதைக்க வேண்டாம் என்றும் இரகசியமாக எனது காதினுள் சொன்னார்.
ஒரு இளைஞர் பயமின்றி சத்தமாக கதைக்கத் தொடங்கினார். டேய், தம்பிமார், அண்ணைமார் உங்களில யாராவது புலிகளுடன் சம்மந்தப்பட்டிருந்தால் பொலிசிடம் போய் சொல்லுங்கோடா! ஏன் உங்களுக்காக அப்பாவிகளான எங்களையும் போட்டு வதைக்கிறீங்கள்? எல்லோரும் அவன் கதைப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தோம். பதில் பேசவில்லை. மற்றவர்களிடம் மிஞ்சி இருந்த குளிர்பானங்கள், பனிஸ், பாண், வடைகளை பகிந்து உண்டபின் காலை சுமார் நான்கு அரை ஆகி இருந்தது. மெல்ல மெல்ல சுவர் மற்றும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி நித்திரைசெய்யத் தொடங்கினோம்!
காலை சுமார் 5.45 மணியளவில் எல்லாரும் மெல்ல மெல்ல எழும்பி விட்டோம். பொலிஸ்காரன் ஒருவன் எங்களில் ஒவ்வொருவராக அழைத்து முகங்கழுவி மலசலகூடம் செல்வதற்கு கூட்டிக் கொண்டு போனான். சீ.ஐ.டி யாக இருக்ககூடும் என்று எதிர்பார்த்தவனைக் காணவில்லை. நாங்கள் ஓரளவு சோர்வில் தூங்கியபின் அவன் எங்களது கூண்டில் இருந்து வெளியே சென்றுவிட்டான் என்பதை அறிந்து கொண்டோம். இப்போதுதான் சிறீ லங்கா உளவுப் பிரிவு எத்தனை ஜிம்மாளங்கள் எல்லாம் செய்கிறார்கள் என எனக்கு விளங்கத் தொடங்கியது!
ஊரில் இருந்தபோது தமிழ் ஆட்களை தினமும் கொழும்பில் பிடிக்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள் என பந்தி, பந்தியாக செய்திகள் படித்திருந்தேன். ஆனால் இப்போது நானே செய்தியாகி விட்டதை நினைக்கும் போது மனதிற்கு மிகவும் துக்கமாகவும், அதேநேரம் பயமாகவும் இருந்தது. உதயன், ஈழநாதம், முரசொலி பேப்பர்களில் படித்த சித்திரவதைகள் எனக்கும் நடக்கப்போகிறதோ என்பதை நினைக்க மிகவும் பயமாக இருந்தது. கொழும்புக்கு போகப்போகின்றேன் எனச் சொன்னதும் வீட்டில் மிகவும் எதிர்ப்பு வந்தது. கொழும்பில் உன்னையும் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள் என பயமுறுத்தினார்கள். நண்பர்களும் அவ்வாறே சொன்னார்கள். ஊரிலிருந்து போன பல அப்பாவி நண்பர்களை சிறீ லங்கா பொலிசு அயோக்கியத்தனமாக உள்ளே தள்ளிவிட்டார்கள் என கூறினார்கள். ஆனால் ஊரில் எனது நிலமை, குடும்ப நிலமை மோசமாக இருந்ததால் எவ்விதமான ஆபத்தையும் எதிர்கொள்வது என்று துணிந்து கொழும்பு வந்தேன்.
என்னுடன் பிடிக்கப்பட்டவர்களில் பதின் நான்கு பேர் முதல் தரமாக பிடிபட்டவர்கள். நான்கு பேர் இரண்டாவது தரமாக பிடிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டுபேர் ஏற்கனவே இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் பொலிசினால் பிடிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கனவே பிடிபட்டிருந்தவர்களிற்கு அனுபவம் இருந்ததால் தீர்க்கதரிசிகளைப் போல் எனக்கு இனி என்னென்ன நடைபெறப்போகிறது என்று காண்டம் வாசிக்கத் தொடங்கினார்கள். எப்படி, எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்வது என்று எனக்கு அறிவுரைகளும் தந்தார்கள். இவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்கக் கேட்க எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. வாழ்க்கையில் படுபாதாளத்தில் விழுந்துவிட்டதை முதல் தடவையாக உணர்ந்தேன்.
சுமார் ஏழுமணிக்கே பொலிஸ் ஸ்டேசனுக்கு பொறுப்பான ஓ.ஐ.சி(Officer In Charge) வந்துவிட்டான். அவனுக்கு ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு தடவைக்கு மேலாக தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தன. வந்த அழைப்புக்கள் எல்லாம் பிடிபட்டவர்களை விடுவிக்க கோருவது சம்மந்தமாகவே வந்தது. உறவினர்கள் பொலிஸ் ஸ்டேசனுள் உள்ளே வரமுடியாதபடி வாசலிலேயே வைத்து மறிக்கப்பட்டனர். எம்மை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாகவும் எதையும் நீதி மன்றத்தில் வந்து கதைக்குமாறும் சொல்லி அனுப்பப்பட்டார்கள். எம்முடன் பிடிபட்ட மட்டக்களப்பை சேர்ந்த இருவர் யாரோ ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஓ.ஐ.சி க்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியதால்(இந்த தமிழ் எம்.பி யின் பெயர் யோகேஸ்வரன் என்று நினைக்கிறேன். யோக என்று இவரது பெயர் ஆரம்பிக்கிறது) காலை ஏழு முப்பது மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். என்னையும் இவ்வாறு யாராவது தமது செல்வாக்கை பயன்படுத்தி விடுதலை செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. இப்போது எமது குழுவில் எல்லாமாக பதினெட்டு பேர் இருந்தோம். மற்றவர்களின் உறவினர்களும் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி தமது உறவுகளை காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் ஓ.ஐ.சி மிகவும் துவேசம் பிடித்தவனாக, கரார் பேர்வழியாக இருந்ததால் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நேரத்தில் ஒரு உதவாக்கரையைப் பற்றியும் பேசவேண்டியுள்ளது. நான் கொழும்புக்கு வெளிக்கிட்டபோது எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கம், விலாசம் எனது பெற்றோரால் எனக்கு தரப்பட்டது. ஏதாவது பிரச்சனை வந்தால் இவருடன் தொடர்பு கொண்டு இன்னாரின் மகன் என்று சொல்லி உதவி கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தேன். குறிப்பிட்ட நபர் சிறீ லங்காவின் ஒரு அமைச்சரவையில் செயலாளராக இருந்தான். நான் கொழும்பு வந்ததும் பலமுறை இவனுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனளிக்கவில்லை. வீட்டிற்கு நேரில் செல்லாம் என யோசித்த போது அதுவும் முடியவில்லை. அவன் பெரிய அரசியல் புள்ளிகளின் வீடுகளிற்கு அருகில் இருந்ததால் என்னை போன்ற லோக்கல் குடிமகனால் அவனை உறவினனாக இருந்தும் கிட்டவும் அணுக முடியவில்லை. அவனும் நான் புலியாக இருப்பேனோ என சந்தேகப்பட்டான். இறுதியில் இவ்வாறு நான் அவனை உதவிகேட்டு துரத்தி திரிவதை அறிந்தவன் இன்னொரு உறவினனிடம் நான் தன்னை பார்க்கமுடியாதென்றும் தான் சரியான பிசி என்றும், மேலும் கொழும்பில் நான் தங்க வசதி இல்லையென்றால் ஊருக்கு திரும்பி போய்விடுவதே புத்திசாலித்தனமானது என்றும் சொல்லிவிடுமாறு கூறியிருந்தான். இவனாவது இறுதி நேரத்தில் நான் பொலிசில் பிடிபட்டுள்ளதை அறிந்து உதவி செய்யக்கூடும் என்ற நப்பாசையில் நான் பிடிபட்டதை கேள்வியுற்று வந்த நண்பனிடம் இவனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தேன். நண்பன் அவனுடன் தான் கதைத்ததாகவும் அவன் நான் தனக்கு உறவினராக இருந்தாலும் என்னைப்பற்றி விபரமாகத் தெரியாதபடியால் எனக்கு உதவமுடியாது என்று கூறிவிட்டதாகவும், மேலும் தமது செல்வாக்கை பயன்படுத்தி இவ்வாறு உறவினர்களுக்கு உதவக்கூடாது என்று தான் அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்டிருப்பதாகவு ம் என்னை நீதிமன்றத்தில் வைத்து கதைத்தபோது அவனுடன் கதைத்தவற்றை கூறினான்.
இப்போது காலை 7.45 மணியளவில் இருக்கும். ஏற்கனவே அனுபவம் உடைய என்னுடன் பிடிபட்ட மற்றவர்கள் எம் எல்லோரையும் பொலிசு நீதிமன்றதிற்கு கொண்டு சென்றபின் நாம் எல்லோரும் மகர சிறைச்சாலையில்(Mahara Prison) அடைக்கப்படலாம் என எதிர்வு கூறினர். நேற்று நடைபெற்ற குண்டுத்தாக்குதல் மிகப்பாரிய அழிவை கொழும்பில் ஏற்படுத்தியிருப்பதாகவும் இதனால் நாம் நீதிமன்றத்தில் வைத்து பிணையில் (Bail) விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லையென்றும் அபசகுணமாகப் பேசினார்கள். இப்போது காலை சுமார் எட்டு மணியளவில் பொலிசு கூண்டிலிருந்து எம்மை ஒவ்வொருவராக வெளியே கூப்பிடப்பட்டு பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு கூட்டிச் செல்லத் தொடங்கினார்கள். ஏற்கனவே 18 பேரில் 12 பேர் சென்றுவிட்டார்கள். 6 பேர் கூண்டினுள் மிஞ்சி இருந்தோம். மற்றவர்களை வைத்து பொலிஸ் என்ன செய்கிறார்கள் என எங்களுக்கு விளங்கவில்லை. அவர்களிற்கு பொலிஸ் அடிக்கிறார்களோ என்பதை நினைக்க பயமாக இருந்தது.
இப்போது எனது தடவை வந்தது. குலை நடுக்கத்துடன் பொலிசு காட்டிய பகுதிக்கு அவனது காவலுடன் நடந்து சென்றேன். ஒரு தடியன் முன்னால் கொண்டுபோய் நான் நிறுத்தப்பட்டேன். அவன் என்னை பல கேள்விகள் கேட்டு விசாரித்தான். நேற்று நடந்த குண்டுவெடிப்பை பற்றி ஏதாவது தகவல் தெரியுமா? ஏன் கொழும்புக்கு வந்தாய்? ஊரில் என்ன செய்தாய்? உனக்கு யார் கொழும்பில் இருப்பதற்கு காசு தருகிறார்கள் என அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான். இந்த விசாரணையின் பின் நான் பொலிஸ்டேசனின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு இன்னும் உடம்பில் அடிவிழாதது கண்டு ஆச்சரியப்பட்டேன். மற்றைய பகுதிக்கு சென்றபோது என்னுடன் பிடிக்கப்பட்ட மற்றவ்ர்கள் சேர்ந்து ஒரு குழுவாக நிற்பதைக் கண்டேன். எனக்கு பொலிசாரினாலும், மற்றைய நண்பர்களாலும் உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. திடீரென்று பொலிசார் எம்மீது காட்டும் அன்புக்கான அர்த்தம் அப்போது எனக்கு தெரியவில்லை. அங்குதான் முதன்முதலாக நான் எனது வழக்கறிஞரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தரப்பட்டது.
இந்த தமிழ் வழக்கறிஞரை பற்றி இங்கே கொஞ்சம் கூறுவது பொருத்தமானது. இவன் பார்ப்பதற்கு ஒரு வெருளிக் குஞ்சு போல் இருந்தான். நல்ல குடிகாரச்சாமி என்று வேறு சொன்னார்கள். எனக்கென்று ஒரு வழக்கறிஞரும் வரவில்லை. இதனால் மற்றைய நண்பர்கள் தங்கள் வழக்கை கவனிக்கப்போகும் இவனையே வழக்கறிஞராக நான் பிடிக்கலாம் என்றும் இதற்கு ஆகக்குறைந்தது ரூபா 5000 ஆகுமென்றும் கூறினார்கள். இன்னும் சிலர் சேர்ந்து இன்னொரு தமிழ் வழக்கறிஞரை பிடித்தார்கள். இப்பொழுது எம் 18 பேரின் வழக்கை கவனிக்க இரண்டு வழக்கறிஞர்களும் தயாராகி விட்டார்கள். ஆனால் எம்மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன என்று ஒருவருக்கும் தெரியவில்லை. இரு வழகறிஞர்களும் பொலிஸ் அதிகாரிகளும் பெரிய, பெரிய பகிடிகள் எல்லாம் விட்டு, சத்தம் போட்டு சிரித்து மச்சானும், மச்சானும் போல கதைத்துக் கொண்டு இருந்தார்கள். இதேநேரம் வேறு இரு பொலிஸ் அதிகாரிகள் ஒரு பெரிய சட்டப்புத்தகத்தை கையில் தூக்கிவைத்துக் கொண்டு எமக்கெதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் கடதாசியை நீதி மன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தட்டச்சு செய்து கொண்டிருந்தார்கள். தட்டச்சு செய்யும் போது இடையிடையே அந்தப் பெரிய சட்டப்புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பைபிலை ஆராய்வது போல் வரிவரியாகக் காட்டி தம்மிடையே விவாதித்துக் கொண்டு இருந்தார்கள். சுமார் 30 நிமிடங்களில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக் கடதாசி தயாராகிவிட்டது. எமது வெருளிக் குஞ்சு வழக்கறிஞரையும் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளையும் குற்றச்சாட்டு கடதாசியை எழுதிய பொலிஸ் அதிகாரி கூப்பிட்டான். இப்போது சுமார் ஐந்துபேர் குற்றக் கடதாசியை வைத்து விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.
கடைசியில் எமது வெருளிக் குஞ்சு எம்மிடம் வந்து தான் நீதிமன்றத்தில் கதைத்து எம்மை விடுதலை செய்வதாகவும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து இடுமாறும் சொன்னது. எனக்கு நான் கையெழுத்து இடப்போவது குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளும் ஒப்புதல் வாக்குமூலம் என்று தெரிந்திருக்கவில்லை. கும்பலுடன் கோவிந்தா என்று எல்லோருடனும் சேர்ந்து நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படப்போகின்றேன் என்ற புளுகத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட்டேன். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை வெருளிக்குஞ்சும் சொல்லவில்லை, நாங்களும் கேட்கவில்லை. இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுவது மிகப்பொருத்தமானது. அதாவது தமிழ் வழக்கறிஞர்கள் கூட உண்மையுடனும், நேர்மையுடனும், தொழில் தர்மத்துடனும் வேலைசெய்யவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை சிங்களக் குண்டர்கள் துன்புறுத்துவது போதாதென்று இவர்களும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு பச்சைத் துரோகம் செய்கிறார்கள்.
சிறீ லங்கா பொலிசு அப்பாவித் தமிழ் இளைஞர்களை அள்ளி அள்ளிப் பிடிப்பதன் இன்னொரு இரகசியம் இது ஒரு பெரிய வியாபாரம். இந்த வியாபாரம் சிறீ லங்கா நீதித்துறையாலும் சிறீ லங்கா காவல்துறையாலும் உத்தியோகப்பற்றற்ற முறையில் நடத்தப்படுகிறது. ஒரு அப்பாவி தமிழ் இளைஞனைப் பிடித்து நீதிமன்றத்துக்கு கொண்டுபோனால் பொதுவாக சுமார் ரூபா 5000 தொடக்கம் சுமார் ரூபா 25000 வரை சம்பாதிக்க முடியும். வழக்கறிஞர்கள் சுருட்டிக் கொள்ளும் காசு இந்தக் கணக்கில் அடங்கவில்லை. அது வேறாக இன்னும் பல ஆயிரங்கள்! வெளியில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களிற்கு இது வெறும் கைதுகளாகத்தான் தெரியும். ஆனால் இதனுள் எத்தனை கோடிகள் புரட்டப்பட்டு வியாபாரம் நடக்கின்றது என்பது சிறீ லங்கா நீதித்துறைக்கும், சிறீ லங்கா காவல்துறைக்கும் மட்டும் தெரிந்த இரகசியங்கள். கொழும்பில் உள்ள ஊடகத்துறைக்கும் இந்த ஜிம்மாளங்கள் எல்லாம்தெரியும். ஆனால் பத்திரிகைகளில் இதைப்பற்றி எழுதும் அளவிற்கு அவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை.கைதுகள் என்ற போர்வையில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் வதைக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை சிதைக்கப்படும் அதேநேரம், அவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் சிறீ லங்கா அரசாங்கத்தால் அப்பாவி தழிழ் இளைஞர்களிடமிருந்து திருடப்படுகிறது. இதை பட்டப்பகலில் சிறீ லங்கா அரசு செய்யும் கொள்ளை என்று கூறினால் அது மிகையாகாது. இதில் கசப்பான உண்மை என்னவென்றால் தமிழ் வழக்கறிஞர்களும் இந்தபகல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதைப்பற்றி ஏதாவது கொழும்பில் உள்ள தமிழ் வழக்கறிஞர்களிடம் கேட்டால் அவர்கள் தமிழர்களிற்கு தாம் சேவை செய்வதாகவும், வெறும் காற்றைக்குடித்து வாழ்வதாகவும், தாம் ஒரு அப்பாவிகள் எனவும் கூறி உங்கள் காதில் பூ வைத்துவிடுவார்கள்!
நான் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். எம்முடன் பொலிஸ்டேசனில் ஐந்து தமிழ் பெண்களும் பிடிக்கப்பட்டிருந்தார்கள் என்று முன்னர் சொன்னேன் அல்லவா? அவர்களை எங்களை கூண்டினுள் போட்ட நேரத்தில் வேறு எங்கோ கூட்டிக் கொண்டுபோய் எங்களிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் போட்ட கூக்குரல், அட்டகாசம், மற்றும் அழுகை காரணமாக காலையில் கடுமையான எச்சரிக்கையின்பின் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுவிட்டார்க ள். அதாவது அவர்கள் தினமும் பொலிஸ்டேசனுக்கு போய் கையெழுத்து போட வேண்டும். இந்த நேரத்தில் ஒரு அறிவுரையை தமிழ் பெண்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் சிறீ லங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டால் கைதுசெய்யப்படும் அந்தக் கணத்திலிருந்தே உங்களால் முடிந்தளவு போராட்டத்தை அழுகை, கூக்குரல், பேயாட்டங்கள் மூலம் செய்து நீங்கள் பொலிசினை நிலைகுழையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களது தொல்லையை தாங்க முடியாத பொலிசு எப்படியும் உங்களை விரைவில் விடுதலை செய்துவிடும். அவ்வாறு இல்லாது அமைதியாக இருந்து உங்களுக்குள் முணகி அழுதுகொண்டிருந்தால் கடைசியில் கம்பி எண்ணவேண்டியதுதான்!
இப்போது காலை ஒன்பது மணியளவு ஆகத்தொடங்கியது. வெருளிக்குஞ்சு வழக்கறிஞன் தான் எங்களை சிறீ லங்காவின் நீதிமன்றத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு பொலிஸ்டேசனைவிட்டு போய்விட்டான். இப்போது ஆயுதம் தரித்த சுமார் ஆறு பொலிசார் எம்மை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். ஒரு பெரிய நாய்பிடிக்கும் வண்டி ரிவேர்சில் எங்களை நோக்கி வந்தது. நாம் உடனடியாக வண்டியினுள் ஏற்றப்பட்டு ஆயுதந்தரித்த பொலிசாரின் காவலுடன் சிறீ லங்காவின் நீதிமன்றம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டோம். வீதியின் இருமருங்கும் நின்றவர்கள் எங்களை படுபாதகர்களாக கற்பனைசெய்தபடி சந்தோசத்துடன் விடுப்பு பார்த்தார்கள். சூரியன் உதித்து கொழும்பு மாநகர் வெளிச்சமாகக் காணப்பட்டது. ஆனால் எனது வாழ்வு இருண்டுவிட்டதை சிறீ லங்காவின் நீதிமன்றம் செல்லும் போது நான் உணர்ந்தேன்.
நாய்வண்டி சிறீ லங்கா நீதிமன்றத்தின் வாயிலினூடாக நுழைந்து கைதிகளை தற்காலிகமாக அடைக்கும் இடத்திற்கு அருகாக போய் நின்றது. கடகட வென நாம் எல்லோரும் ஆடுமாடுகளைப்போல் அவசரப்படுத்தப்பட்டு இறக்கப்பட்டோம். வரிசையாக ஒருவர் பின் ஒருவராக கைதிகளின் சிறைக்கூண்டு நோக்கி கூட்டிச்செல்லப்பட்டோம். முன்பு இருந்த நிலைக்கும் இப்போது இருந்த நிலைக்குமிடையே பொலிசாரின் நடத்தையில் பாரிய மாற்றத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. பொலிசார் எம்மீது மிகக் கடுமையாக நடக்கத்தொடங்கினாங்கள். மெதுவாக நடந்தவர்களின் மண்டைமீது குட்டுக்கள் விழுந்தது. அங்கால், இங்கால் பறாக்கு பார்த்தவருக்கு சொக்கையில் பவுண்டரி அடிக்கப்பட்டது. எங்களது நாய்வண்டி வந்த அதேநேரம் வேறு வேறு இடங்களிலும் இருந்து பல நாய்வண்டிகள் வந்தன. எமது வண்டிக்கு முன்பு வந்த சில வண்டிகள் சரக்கை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருந் தன. வெவ்வேறு சிறிய, சிறிய அளவுகளிலும் நாய் வண்டிகள் வந்தன. "சிறீ லங்கா போலிசிடம் இத்தனை வகை வகையான நாய்வண்டிகளா!" நான் இவற்றை முதன்முறை பார்த்ததால் பிரமித்துபோய்விட்டேன்!
இங்கு ஒரு விடயத்தை கூறிச் செல்வது பொருத்தமானது. நீஙகள் ஒரு உறவினரின் அல்லது தெரிந்தவரின் உயிரை தனியார் வைத்தியசாலையில் பறிகொடுத்தபோது வைத்தியசாலையின் நிருவாகம் எப்படி ஒருவரின் மரணத்தை உறவினர்களுடன் கையாள்கிறது என்பதை உற்றுக் கவனித்து இருந்தால் சிறீ லங்கா பொலீசு எப்படி கைதிகளின் உறவினர்களை நிருவாகம் செய்கின்றது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இதை படிமுறைகளாக சொன்னால் விளங்குவதற்கு இலகுவாக இருக்கும்.
வைத்தியசாலை நிருவாகம் மரணத்தை நிருவகிக்கும் முறை:
அ. அடிக்கடி தாதிகளை அனுப்பி நோயாளியை பார்க்கச் செய்வார்கள்
ஆ. அடிக்கடி வைத்தியர் மிகவேகமாக நடந்துவந்து நோயாளியை பார்த்துச் செல்வார்
இ. நோயாளிக்கு ஒட்சிசன் வாய்மூலம் கொடுக்கப்படும்
ஈ. நோயாளி ICUக்கு கொண்டு செல்லப்படுவார்
உ. உறவினர்கள் நோயாளியை பார்ப்பதும் தடை செய்யப்படும். தம்மால் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்று உறவினர்களிற்கு வைத்தியர் கூறுவார்
ஊ. மிக நீண்ட நேரத்திற்கு நோயாளி ICU இனுள்ளேயே வைத்திருக்கப்படுவார்
எ. நோயாளி இறந்ததும் நோயாளியின் இதயத்துடிப்பு நன்றாகக் குறைந்துவிட்டது என்று உறவினர்களிடம் கூறப்படும்
ஏ. நோயாளிக்கு இப்போது இதயத்துடிப்பே இல்லையென்ற மாதிரி உறவினர்களிற்கு கூறப்படும்.
ஐ. இறுதியில் உறவினர்கள் ICU இனுள் சென்று நோயாளியை பார்வையிடலாம் என்று கூறப்படும். அங்கே பல மணி நேரத்துக்கு முன் இறந்த அன்புக்குரியவரின் உயிரற்ற உடல் காணப்படும்.
அதாவது ஒருவரது மரணத்தை எப்படி உறவினர்களுடன் கையாள்வது என்பது ஒரு கலை. இது படிப்படியான பல அம்சங்களைக் கொண்டது (It is a Step by Step Process). சரியாக இதேமாதிரியானதே அப்பாவித் தமிழ் கைதிகளை சிறீ லங்கா போலிசு கையாளும் முறை!
சிறீ லங்கா போலிசு நிருவாகம் தமிழ் கைதிகளை கையாளும் முறை:
அ. அப்பாவி தமிழ் இளைஞர்கள் போலீசுஸ்டேசனுக்கு விசாரணைக்கு வருமாறும் சில மணி நேரத்தில் விசாரணையின் பின் விடுவிக்கப்படுவதாகவும் சொல்லி சிறீ லங்கா பொலிசாரினால் கூட்டிச் செல்லப்படுவார்கள்
ஆ. பொலிஸ்டேசனில் வைத்து நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டபின் அங்கு வைத்து உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவார்கள்
இ. நீதி மன்றத்தில் வைத்து அப்பாவி இளைஞர்களை தற்காலிகமாக சிறையில் அடைக்குமாறு நீதிபதியிடம் சிறீ லங்கா போலிசார் மனு சமர்ப்பிப்பார்கள்
ஈ. பிணையில் இளைஞர்களை விடுவது ஆபத்தானது எனக்கூறி சிறைவாசக்காலத்தை பொலிசார் சிறீ லங்கா நீதிமன்றம் மூலம் நீடிப்பார்கள்
உ. இறுதியில் அப்பாவி இளைஞர்களின் சிறைவாசம் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற போர்வையில் சிறீ லங்கா பொலிசாரினால் நிரந்ததரமாக்கப்பட்டுவிடும்
கைதிக்கு கைதி மேற்கூறிய படிமுறைகளில் சிறு, சிறு மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் சிறீ லங்கா பொலிசார் அப்பாவித் தமிழ் இளைஞர்களிற்கு எதிராகப் பயன்படுத்தும் அடிப்படைச் சித்தாந்தம் அனைத்து தமிழ் இளைஞர்களிற்கும் பொதுவானது. அதாவது அப்பாவி தமிழ் இளைஞர்கள் மிகநன்றாக சட்டத்தின் பெயரால் சிறீ லங்கா அரசினால் ஏமாற்றப்படுகின்றார்கள்.
நாம் எல்லோரும் சுமார் நூற்று ஐம்பது சதுரஅடி பரப்பளவுள்ள தற்காலிக சிறைக்கூண்டினுள் அடைக்கப்பட்டோம். அதனுள் ஏற்கனவே சுமார் ஐம்பது கைதிகள் இருந்தார்கள். நாம் போனபின்பும் புதிதாக கைதிகள் கூண்டினுள் வந்து கொண்டிருந்தார்கள். எழும்பி நிற்கவும் முடியவில்லை. குந்தி இருக்கவும் முடியவில்லை. ஒற்றைக்காலில் சுவரை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது. இதை விபரிக்க நெரிசல் என்ற சொல்லை பாவிப்பது பொருந்தாது. தேன் கூட்டில் எவ்வளவு அடர்த்தியாக தேனீக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறி மொய்த்து இருக்கின்றனவோ அவ்வாறான சனக்கூட்டம் அச்சிறிய கூண்டினுள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இப்போது கூண்டில் இருந்த 75% கைதிகள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கிளவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரிய, பெரிய கொலை கேசுகளுடன் சம்மந்தப்பட்ட கிரிமினல்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும், கற்பழிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களாகவும், சிறு, சிறு திருட்டுச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் நாம் ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருந்தோம். கண்ட, கண்ட கெட்ட வாசனைகள் எல்லாம் சிங்கிள கைதிகளில் இருந்து வீசியது. சிலர் அச்சிறிய கூண்டில் இருந்தும் புகை, மற்றும் கஞ்சா அல்லது குடு போன்றவற்றை நுகர்ந்து கொண்டிருந்தார்கள். கெட்ட, கெட்ட வார்த்தைகள் கூறினார்கள். தமிழ் கைதிகளை வெருட்டவும் செய்தார்கள். நான் தற்செயலாக சனநெரிசலின் காரணமாக தன்னை சிறிது தள்ளிவிட்டேன் என்ற கோபத்தில் ஒரு வெறிகாரன் எனக்கு அடிக்கவும் வந்துவிட்டான்.
இந்த நேரத்தில் குந்தியிருந்த ஒரு தமிழ் இளைஞன் நெரிசல், வலி தாங்க முடியாது எழும்ப முயன்ற போது சிறைக்கூண்டிற்கு வெளியே நின்று எம்மை அவதானித்துக் கொண்டு இருந்த ஒரு சிறீ லங்கா போலிசுகாரன் அவனை திரும்பவும் அதே இடத்தில் உட்காருமாறு சத்தமாக கட்டளையிட்டான். இவனால் வலி தாங்க முடியவில்லை. திரும்பவும் மெல்ல எழும்ப முயற்சித்தபோது மின்னல் வேகத்தில் பெரிய சத்தமிட்டபடி கூண்டை அடித்துத் திறந்து கொண்டுவந்த சிறீ லங்கா போலிசுகாரன் மிகக்கொடூரமான முறையில் அந்த அப்பாவி இளைஞனைத் தாக்கினான். தனது சப்பாத்து கால்களால் இளைஞன் மீது ஏறி உலக்கி மிகக்கொடூரமாக இளைஞனை அவன் தாக்கினான். அப்பாவித் தமிழ் இளைஞன் வலியின் கொடூரம் தாங்க முடியாததால் சத்தமிட்டு அழுதான். அவனது முகம் இருபுறமும் கொழுக்கட்டையாக சிவந்து வீங்கிவிட்டது. இளைஞனின் கண் இரத்தச் சிவப்பாகிவிட்டது. பல்லும் உடைந்துவிட்டது. இவ்வளவற்றையும் நேரில் பார்த்த சிங்களக் கைதிகள் கூட பயந்து நடுங்கிவிட்டார்கள். கூண்டு சுமார் பத்து நிமிடங்களிற்கு மயான அமைதியாகிவிட்டது. ஒருவருடன் மற்றவர் கதைக்கவில்லை. எல்லோரும் அடிவாங்கிய அப்பாவித் தமிழ் இளைஞனை அமைதியாகப் பார்த்தார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தக் கணத்தில் நான் ஒரு முழு மனநோயாளியாகிவிட்டேன் என்றுதான் கூற வேண்டும்.
சிறிது நேரத்தில் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் அநீதிபதி வந்ததும் விசாரணகள் தொடங்கியது. ஒவ்வொரு வழக்கினதும் வரிசைக்கிரமத்தில் விசாரணைகள் தொடங்கியது. விசாரணைக்கு குறிப்பிட்ட வழக்குகள் அண்மிக்கும் நேரத்தில் கூண்டினுள் இருந்த அந்தந்த வழக்குகளுடன் சம்மந்தப்பட்ட குற்றைவாளிகள்(?) ஆயுதந்தரித்த பொலிசாரின் கண்காணிப்பில் அநீதிபதி முன்னால் கொண்டுசெல்லப்படுவதற்காக கூண்டைவிட்டு வெளியேற்றபட்டு வெளியே வரிசையாக காத்திருக்கச் செய்யப்பட்டார்கள். முதலில் சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கைதிகளின் வழக்கே விசாரணைக்கு வந்தது. ஒவ்வொருவராக விசாரணை முடிந்து கூண்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். கூண்டில் இருந்த எல்லோருக்குமே இன்னொரு திகதிக்கு வழக்கிற்கான தவணை கொடுக்கப்பட்டு சிறைவாசம் நீடிக்கப்பட்டு இருந்தது. எமது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும், நாம் விடுவிக்கப்படுவோமா என்ற எதிர்பார்ப்புடன் 18 அப்பாவி தமிழ் இளைஞர்களும் கூண்டினுள் காத்துக்கொண்டு இருந்தோம்.
கொஞ்ச நேரத்தின் பின் எங்கள் 18 பேரின் பெயர்களும் கொச்சையாக சிங்களப் பொலிசாரினால் உச்சரிக்கப்பட்டு கூப்பிடப்பட்டது. சிறைக்கூண்டு திறக்கப்பட்டு நாங்கள் வரிசையாக அநீதிபதியின் முன் நிறுத்தப்படுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டோம்.
சில நிமிடங்களில் எமது பெயர் அநீதிமன்றத்தில் உரத்து வாசிக்கப்பட்டது. குற்றவாளிக்கூண்டினுள் 18 பேரும் ஒன்றாக நிற்பதற்கு இடம் போதவில்லை. அதனுள் எம் எல்லோரையும் அமுக்கி அடக்க எமக்கு பின்னால் இருந்து சிறீ லங்காப் பொலிசார் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். இப்போது போலிசார் எமக்கெதிரான குற்றப்பத்திரிகையை அநீதிபதியிடம் தாக்கல் செய்து, அதை விபரிக்கத் தொடங்கினர். அநீதிபதி அவர்கள் பக்கமாகத் திரும்பி அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கே அவனது மனச்சாட்சி சங்கடம் கொடுத்ததாலேயே எங்களைப் பார்க்கவில்லையோ தெரியாது! போலிசார் தமது அறிக்கையை விளக்கிமுடிந்ததும் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் மேசையைவிட்டு எழும்பி நின்று அநீதிபதியைப் பார்த்து ஏதோ சொல்ல வெளிக்கிட்டது. ஆனால் அநீதிபதி வெருளிக்குஞ்சை அசட்டை செய்தபடி போலிசு தனது கதையைச் சொல்லி முடிந்தகையோடே கிடுகிடுவென ஏதோ எழுதத்தொடங்கிவிட்டது.
இதன்பின் அநீதிமன்றத்தில் என்ன நடந்தது என்பது இப்போது நினைவில்லை. ஆனால் எமது வெருளிக்குஞ்சு வழக்கறிஞர் எம்மிடம் வந்து எம்மை ஒரு கிழமைக்கு ரிமான்ட்டில் வைத்து மகர சிறைச்சாலையில் அடைத்துவிடுமாறு அநீதிபதி உத்தரவிட்டுள்ளதாக வந்து சொன்னது. நாம் எல்லோரும் இச்செய்தியைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டோம். போலிசு உடனடியாகவே கடும் கண்காணிப்புடன் எம்மை திரும்பவும் கூண்டுக்குள் கூட்டிக் கொண்டுவந்து அடைத்துவிட்டார்கள். அநீதிமன்றத்தில் இருந்த சிங்களப் பெரும்பான்மையினர் நாம் 18 பேரும் அநீதிபதி முன்னால் கொண்டு செல்லப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். போலிசார் உண்மையான குண்டுவெடிப்பின் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டது போல் சந்தோசப்பட்டார்கள். எங்களை நோக்கி நையாண்டியும் செய்தார்கள். நாங்கள் வெட்கிப்போய் சிறீ லங்கா பேரினவாதிகளின்முன் தலைகுனிந்து நின்றோம்
நாங்கள் ஒவ்வொருவரும் மனதில் பெரும் சோகங்களுடனும், அதிர்ச்சியுடனும் என்ன இனி செய்வது, சிறையில் எமக்கென்ன சித்திரவதைகள் நடக்கப்போகிறது என்று நினைத்து கவலைப்படத் தொடங்கினோம். இப்போது பிற்பகல் சுமார் இரண்டு மணியாகத் தொடங்கியது. வழக்கு விசாரணைகள் முடிந்ததும் கூண்டிலிருந்து சிறைக்கைதிகள் மெதுமெதுவாக அவர்களுக்குரிய சிறைகளிற்கு கொண்டு செல்லப்படுவதற்காக கூண்டிலிருந்து அகற்றப்படத் தொடங்கினார்கள். கூண்டினுள் இருந்து வெளிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே முதலாவதாக அகற்றப்படத் தொடங்கினார்கள். கொஞ்ச நேரத்தில் கூண்டு மெல்ல, மெல்ல வெளிக்கத் தொடங்கியது. கூண்டினுள் சிங்கிளக் கைதிகளுடன் முஸ்லீம் கைதிகளும் கணிசமான அளவில் காணப்பட்டனர். சிங்கிளவர்களுடன் அவர்கள் சினேகபூர்வமாக கதைத்து மகிழ்ந்தார்கள். எம்முடன் ஒன்றும் கதைக்கவில்லை.
கூண்டிற்கு வெளியே தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் உறவுகளிற்கு குளிர்பானப் போத்தல்கள், சிற்றுண்டிகள், பல் மினுக்குவதற்கு பற்பசை, சோப் போன்றவற்றை கடையில் வாங்கி சப்ளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். வந்தோம், கண்டோம், சாமன்களைக் கொடுத்தோம், விடைபெற்றுச் சென்றோம் என்ற மாதிரியே உறவினர்கள் தமது உறவுகளை அணுக முடிந்தது. உறவினர்கள் அழுவதற்கோ அல்லது கூண்டுக்கு அருகில் ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்பதற்கோ போலிசார் அனுமதிக்கவில்லை. சிங்களக் கைதிகளைப் பார்க்க பெரும்பாலும் உறவினர்கள் வரவில்லையென்றே கூற வேண்டும். ஆனால் பல தாதாக்கள் வந்து அவர்களிற்கு உணவுப் பொருட்களை கொடுத்து(முக்கியமாக சிகரட், குடு) தாம் விரைவில் வெளியே எடுப்பதாய் உறுதி கூறிச் சென்றார்கள் (நம்மட தமிழ் சினிமாப் படங்களில் வருவது போல்).
நேரம் சுமார் ஐந்து மணியாகத் தொடங்கியது. மகர சிறை தவிர்ந்த மற்றைய சிறைகளிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய கைதிகள் ஏற்கனவே கூண்டைவிட்டு அகற்றப்பட்டு விட்டனர். கூண்டில் சுமார் நாற்பது பேர் எஞ்சி இருந்தோம். அனைவரும் மகர சிறைக்கு போகப்போறவர்கள். எனக்கு அப்போது ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால், சிங்களக் கைதிகளின் முகத்தில் மீண்டும் தாம் சிறை செல்லப்போகின்றோம் என்ற கவலையோ, பதற்றமோ காணப்படவில்லை. மாறாக ஏதோ தங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பிச் செல்லப்போகின்றோம் என்ற நினைப்பில் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பலர் புகை, குடு போன்றவற்றில் பிசியாக இருந்தார்கள். ஒருசிலர் தமிழ்க்கைதிகளுடன் பேசத் தொடங்கினார்கள்.
எனக்கு "சிங்கள புளுவங் எப்பா", "நம மொக்கத", "வெலாவ கியத" போன்ற ஒருசில சிங்கிள சொற்களே தெரிந்திருந்தது. ஆனால் எம்மில் சிலர் தென் தமிழீழத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களாகவும், சிலர் கொழும்பில் நீண்ட காலமாக வசிப்பவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சிங்களக் கைதிகளுடன் சரளமாகக் கதைத்து ஒருவிதமான புரிந்துணர்வையும், நட்பையும் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆனால் சிங்கிளக் கைதிகளின் எம்மிடமிருந்தான எதிர்பார்ப்பு வேறுவிதமாக இருந்தது. அதாவது அவர்கள் நேரடியாகக் கேட்டும், எம்மைப் பயமுறுத்தியும் எம்மிடம் இருந்த காசுகளை பறிக்கத் தொடங்கினார்கள். ஒரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு இருக்கிறதா என்று கேட்டான். நான் இல்லை என்று பதில் சொல்ல அவன் எனது பொக்கற்று, உள்ளாடைகளை பரிசோதித்து நான் காசு வைத்திருக்கின்றேனா என்று பரிசோதித்தான். எம்மில் சிலர் தங்க நகைகள் போட்டிருந்தனர். ஆனால் அவர்களை சிங்களக் கைதிகள் காசுமட்டும் கேட்டு தொந்தரவு செய்தார்கள். இவர்கள் தங்க நகைகளை கேட்டு பறிக்காததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தாம் சிறைக்கு திரும்பிச் செல்லும் போது சிறைக்காவலர்கள் உடற்பரிசோதனை செய்யும் போது இந்த தங்க நகை எப்படி கிடைத்தது என்று கேட்டால் அவர்களிற்கு பதில் சொல்ல தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே காசை பறிப்பதில் மட்டும் குறியாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் இன்னொரு சிங்களக் கைதி என்னிடம் வந்து காசு தருமாறும் தான் என்னை சிறையில் வைத்து நன்றாக கவனிப்பதாகவும் சொன்னான். இன்னொருவன் வந்து கேட்டதற்கு நான் காசில்லை என்று சொன்னபோது சிறீ லங்காவின் அநீதிமன்றத்துக்கு என்னைப் பார்க்க வந்த உறவினர்களிடம் கேட்டு காசு வாங்கித் தருமாறு தொந்தரவு தந்தான். நாம் சிங்களக் கைதிகள் எம்மீது பலாத்காரம் புரிந்தாலும் அவர்களை பயத்தின் காரணமாக பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
இப்போது மாலை ஆறு மணிசொச்சம் ஆகத்தொடங்கியது. கோர்ட்டிலிருந்து எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அப்பாவித் தமிழ் கைதிகளின் சில உறவினர்கள் மட்டும் வெளியில் தமது அன்புக்குரியவர்களை சிறைக்கு வழியனுப்பிவைப்பதற்காக காத்திருந்தார்கள். சிறைக்காவலாளிகளும் பொலிசாரும் சிறிது நேரத்தில் பரபரப்பு அடையத் தொடங்கிவிட்டார்கள். நாம் செல்லவேண்டிய நாய் வண்டி எமது கூண்டிற்கு அருகாக ரிவேர்சில் வந்துவிட்டது. நாம் ஒவ்வொருவராக வெளியே பெயர் சொல்லி அழைக்கப்பட்டு எமது ஒரு கையிலும் ஒரு காலிலும் நாய்ச்சங்கிலி இணைக்கப்பட்டது. இந்தச் சங்கிலி மூலம் தொடராக சுமார் இருபது பேரை ஒரேயடியாக இணைக்கமுடியும். கைகளிற்கும், கால்களிற்கும் இருவேறு சங்கிலிகள் பாவிக்கப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக நாற்பது பேருக்கும் சங்லிகள் மாட்டப்பட்டபின் நாம் அருகருகில் இருவராக சுமார் இருபது சோடிகளாக, ஒரு சோடிக்கு பின்னால் இன்னொரு சோடியாக அணிவகுத்து நின்றோம்.
இவ்வாறு கையிற்கும், காலிற்கும் சங்கிலிகள் போட்டு அடிமைகள் போல கைதிகளை இழுத்துச் செல்லும் காட்சியை நான் சிறு குழந்தையாக இருந்தபோது ஒருநாள் இரவு எனது அப்பாவுடன் திருகோணமலை நகரில் முற்றவெளியில் இருந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது நேரில் கண்டுள்ளேன். அவர்களை சுமார் பத்து நேவிக்காரர்கள் முன்னும், பின்னுமாக ஆயுதங்களுடன் பிரதான விதியால் நடத்திச் சென்றார்கள். அப்போது அந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு பயமாகவும், கைதிகளின் மீது பரிதாபமாகவும் இருந்தது. ஆனால் அதே நிலமை சுமார் இருபது வருடங்களின் பின் எனக்கு ஏற்பட்டுவிட்டதை நினைக்க மனதிற்கு மிகவும் கவலையாக இருந்தது.
குறிப்பு: இது எனது வாழ்வில் ஏற்பட்ட மிகவும் ஒரு துன்பகரமான சம்பவம். இதன் காரணமாக நான் விடுதலையடைந்த பின் சுமார் ஒரு வருடம் மனநோயாளியாக (ஆனால் வைத்தியரிடம் சென்று சிகிச்சை ஒன்றும் எடுக்கவில்லை) இருக்க வேண்டி வந்தது. கால ஓட்டத்தில் எனக்கு நடந்த கொடுமைகளை மறந்துவிட்டேன். இப்போது யாழ் கள நண்பர்களிற்காக நடந்த சம்பவத்தை மீளவும் நினைவுபடுத்தி எனக்கு என்ன நடந்தது என்பதை மீண்டும் யோசித்து நினைவுபடுத்தி கதையாகக் கூறுகின்றேன். உடனடியாக விசயங்களை கிடுகிடுவென்று விரைவாக எழுதிக் கொண்டு போனால் முக்கியமான விசயங்களை நான் மறந்து உங்களுக்கு சொல்லாது விடக்கூடும். எனவேதான் இத்தொடரை மெது, மெதுவாக பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி கொஞ்சம், கொஞ்சமாக எழுத வேண்டியுள்ளது!
உங்கள் பொறுமைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி! நான் இத்தொடரை எழுதுவதன் நோக்கம் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாதிகளால் நீதி விசாரணை என்று பெயரில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகின்றார்கள் என்பதை அறியாதவர்களும், வெளி உலகமும் அறிந்துகொள்வதற்காகவேயாகும்
இப்போது சோடி சோடியாக நாய் வண்டியினுள் ஏறுமாறு நாம் சிறைக் காவலாளிகளால் பணிக்கப்பட்டோம். நான் முதன்முறையாக வார்டின் என அழைக்கப்படும் சிறைவாசம் அனுபவிக்கும் ஆனால் மற்றைய கைதிகளிற்கு பொறுப்பாக இருக்கும் (அதுதான் அந்த தமிழ்ப் படங்களில் காட்டுவாங்களே, சிறையினுள் இருக்கும் வெள்ளை காற்சட்டை, வெள்ளை பெனியன் போட்ட ஊத்தைவாளிகள், அவங்களைப் போல்) தடியன்களைப் பார்த்தேன். இந்தத் தடியன்களைப் பற்றி நான் புத்தகங்களில், சினிமாப் படங்களில் பார்த்திருந்தேன், அறிந்திருந்தேன். ஆனால முதல் தடவையாக சொந்த வாழ்க்கையில் இவனுகளைப் பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது.
நாய் வண்டியினுள் இருந்த இரண்டு தடியன்கள் உள்ளே ஏறும் கைதிகளை வண்டியினுள் ஒழுங்குபடுத்தி இருக்க வைத்துக் கொண்டு இருந்தான்கள். கைதிகள் சுமார் நாற்பது பேரும் கையிலும், காலிலுமாக சங்கிலிகளால் தொடராக பிணைக்கப்பட்டிருந்ததால் எல்லோரும் ஏறி முடிவதற்கு நீண்ட நேரம் எடுத்தது. வழியனுப்பவந்த அப்பாவித் தமிழ்க் கைதிகளின் உறவுகள் தமது அன்புக்குரியவர்களை அடிமைபோல் இழுத்துச் செல்லும் காட்சியைப் பார்த்து கதறி அழுதார்கள். என்னால் அழ முடியவில்லை. ஏனெனில் நான் ஏற்கனவே எனது மேல்வீடு ஓரளவு கழன்ற நிலையில் இருந்தேன். ஆனால் மற்றைய சில அப்பாவிக் கைதிகள் தமது உறவுகளுடன் சேர்ந்து கண்ணீர் விட்டார்கள்.
என்னுடன் சோடியாக சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தவன் ஒரு வயதுபோன சுமார் 55 வயது மதிக்கத்தக்க தாடி வளர்த்த திருடனாக இருந்தான். அவன் எனது பதற்றமடைந்த முகத்தை பார்த்தோ அல்லது என்மீது பரிதாபப்பட்டோ என்னமோ எனக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கொச்சைத் தமிழில் சொன்னான். நான் குற்றவாளியாக இருப்பேன் என்று தான் நம்மவில்லை என்று சொன்னான். எனக்கு சிறையில் வைத்து வேறு தனது சிங்கிள நண்பர்கள் மூலம் உதவி செய்வதாகவும், என்னைப் பயப்பட வேண்டாம் என்றும் சொன்னான். அவன் என்ன தான் ஆறுதல் வார்த்தை எனக்கு சொன்னாலும் அவனது முகத்தை என்னால் ஏறிட்டு பார்க்கமுடியவில்லை. குடு மற்றும் புகைத்தலால் அவனது வாயில் இருந்து குப்பு குப்பென்று செத்த எலியின் நாற்றம் அடித்தது.
எல்லோரும் ஏறிய பின்னரும் சுமார் பதினைந்து நிமிடங்கள் நாய் வண்டி சிறீ லங்காவின் அநீதி மன்றத்தில் காத்திருந்தது. வாகன ஓட்டுனர் ஏதோ சமிக்ஞைக்காக, மேலிட உத்தரவிற்காக காத்திருந்தான் என நினைகின்றேன். ஏன் இப்படி தாமதிக்கின்றான் என்பதற்கு எனக்கு ஒரு சிங்கள நண்பன் பிற்காலத்தில் வேறு ஒரு காரணம் கூறினான். அதாவது சிறீ லங்கா போலிசார் சில குறிப்பிட்ட, தமக்கு பிடிக்காத, ஆனால் சட்டத்தின் மூலம் ஒன்றும் செய்துவிட முடியாத நபர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தி, வெருட்டுவதற்காக இவ்வாறு செய்வதாகக் கூறினான். அதாவது அந்த குறிப்பிட்ட நபர் வெளியில் தெருவில் போகும்போது அடிக்கடி ஒவ்வொரு முறையும் அந்த நபருக்கு சிறைவண்டியினை காண்பிப்பதன் மூலம் அவரது மனதில் அவர் ஒரு குற்றவாளி என்பதை பலாத்காரமாகத் திணிப்பதாகும். தினமும் இரண்டு மூன்று தடவைகள் இவ்வாறு உளவியல் தாக்குதல் தொடர்ந்து செய்யப்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் உளவியல் ரீதியாக சிறைப்பிடிக்கப்படுவார். இவ்வாறு செய்யும் போது ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி கூட சிறிது காலத்தின் பின் தான் ஒரு குற்றவாளி என்று நினைக்கத் தொடங்குவார். உளவியலில் இதை இன்டிமிடேசன் - Intimidation என்று அழைப்பார்கள். இந்த உளவியல் தாக்குதல் குறிப்பிட்ட சில சிங்களவர்களின் மீதும் நடத்தப்பட்டாலும், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள், தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் சிறீ லங்கா போலிசினால் நடாத்தப்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரின் முன்னால் சிறை வண்டியை காண்பித்து அந் நபருக்கு உளவியல் தாக்குதலை நடாத்துவதற்காகவே எமது நாய் வண்டியின் வாகன ஓட்டுனர் காத்திருந்தான் என நினைக்கின்றேன். ஆனால் தான் இவ்வாறு உளவியல் தாக்குதல் செய்கின்றேன் என்று வாகன ஓட்டுனர் அறிந்திருக்க முடியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் மேலதிகாரி சொல்லும் நேரத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பதே.
சுமார் ஏழு மணியளவில் நாய்வண்டி மகர சிறை நோக்கி புறப்படத் தொடங்கியது. உறவினர்கள் அழுதபடி அப்பாவித் தமிழ்க் கைதிகளிற்கு கையசைத்து பிரியாவிடை கொடுத்தார்கள். நாய் வண்டியினுள் இருந்ததே சிறையில் இருந்தது போன்ற அனுபவத்தையே எமக்கு தந்தது. அதாவது நாங்கள் ஓடிக்கொண்டிருக்கும் சிறையினுள் இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே கம்பிகளால் அடித்து வேயப்பட்ட யன்னலூடாக வெளியில் எட்டிப் பார்த்தார்கள். சிங்களக் கைதிகள் ஆரவாரம் போட்டு தெருவில் போய்வருபவர்களை கூவியழைத்து, சத்தம் போட்டு கும்மாளம் அடித்தார்கள். வெளியில் இருப்பவர்கள் எங்களை தருதலைக் கூட்டம் போவதாக நினைத்து சீ என்று பார்த்தார்கள். பைத்தியக்காரர்களை கொண்டு செல்லும் வண்டிக்கும், நாம் சென்ற சிறை வண்டிக்குமான வித்தியாசமாக என்னால் கூறக்கூடியது, பைத்தியக்காரர் வண்டியில் ஏற்கனவே பைத்தியமாக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள், நாம் சென்ற வண்டியில் பைத்தியமாகிக் கொண்டு இருப்பவர்களும், பைத்தியமாகப் போகின்றவர்களும் இருந்தார்கள்.
இப்போது நன்றாக இருண்டுவிட்டது. சிறிது நேரம் நான் வெளியால் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டுபின், எனது முகத்தை எனது மடியில் புதைத்தபடி நித்திரை செய்யத் தொடங்கிவிட்டேன். நாய் வண்டியினுள் இருந்து பிரயாணம் செய்தது மிகுந்த துன்பத்தை தந்தது. எனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு கேவலமான பயணத்தை நான் சந்திக்கவில்லை. திருநாவுக்கரசு நாயனார் கல்லுடன் கட்டி கடலுடன் போடப்பட்டபோது இவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில், முதலில் எங்களால் சுத்தமான காற்றை கூட நாய் வண்டியினுள் சுவாசிக்க முடியவில்லை. வண்டியினுள் வந்ததெல்லாம் செத்த பல்லியின் நெடியைக் கொண்ட காற்று மட்டும் தான். இவ்வாறு சுமார் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பயணித்தபின் (சரியாக எத்தனை மணித்தியாலங்கள் வண்டியினுள் இருந்தேன் என்று இப்போது என்னால் நினைவுபடுத்த முடியவில்லை) எமது நாய் வண்டி மகர சிறைச் சாலை வாசலில் போய் நின்றது.
எல்லோரும் வெளியில் இறக்கப்பட்டு, சிறைச்சாலையின் வெளியில் பாடசாலை அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குந்த வைக்கப்படுவது போல், நிலத்தில் இருக்க வைக்கப்பட்டோம். சிறைக் கதவு திறப்பதற்கு நீண்ட நேரம் சென்றது. நாம் பொறுமையாக சுமார் 20, 25 நிமிடங்கள் நிலத்தில் குந்தி காத்திருந்தோம். இறுதியாக சிறைக்கதவு திறக்கப்பட்டு நாம் உள்ளே எங்கோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு வைத்து எம்மிடம் இருந்த ஆபரணங்கள், மணிக்கூடு போனற விலையுயர்ந்த பொருட்கள் கழற்றி எடுக்கப்பட்டு காவாலாளிகளால் வாங்கப்பட்டு, கடதாசியிலும் அவற்றின் விபரம் பதியப்பட்டது. எம்முடன் வந்த சிங்களக் கைதிகள் ஆளாளுக்கு தமது சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோல் தம்பாட்டிற்கு கிடு,கிடுவென்று உள்ளே எங்கோ சென்றுவிட்டார்கள். போகும் போது நான் முன்பு குறிப்பிட்ட வயது போன சிங்களக் கைதி எனது முதுகில் தட்டி ஒன்றுக்கும் பயப்படவேண்டாம் என்று கொச்சைத் தமிழில் சொல்லி, சிங்கள சிறைக்காவலாளி ஒருவனிடமும் என்னைக் காட்டி ஏதோ சொல்லிவிட்டு தனது வீட்டு அறைக்கு போவது போல் போய்விட்டான். அவர்கள் சிறையினுள் வாழ்வதை விரும்பியிருந்தார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், நாம் இனி நமக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற விடயம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து முளுசிக் கொண்டு நின்றோம்...
இப்போது வெள்ளை உடை அணிந்த காவலாளிகள் வந்து நாம் போக வேண்டிய இடம் "பி வார்ட்" என்று கூறி அங்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். மேலும், இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் சிறைக்கூடத்தினுள் கொண்டுவரப்பட்டதும் எமது கைவிலங்குகள், கால்விலங்குகள் கழற்றப்பட்டு சுதந்திரமாக விடப்பட்டோம். இப்போது நாம் "பி வார்ட்" இன் வாசலில் காத்திருந்தோம். பசி வயிற்றைக் கிண்டியது.
இத்தருணத்தில் இந்தப் "பி வார்ட்" ஐ பற்றி கொஞ்சம் விளக்கம் தருவது நல்லது. இது சுமார் 30 மீற்றர் நீளமும், சுமார் 10 மீற்றர் அகலமும் கொண்டது என நினைக்கின்றேன். ஓடுகளால் வேயப்பட்ட, யன்னல்கள் அற்ற, ஆனால், சுமார் முக்கால்ச்சுவர் உயரத்தில் இருந்து இருமருங்கும், நீளப்பாட்டுக்கு இரும்புக்கம்பி யன்னலை (கிளிக்கூண்டு போல்) கொண்டது. ஒன்று அல்லது இரண்டு சிறிய மலசலகூடங்களை கொண்டது. இதன் வாயிலின் பக்கத்தில் பெரிய தண்ணீர்த் தொட்டி இருக்கின்றது. கைதிகள் இந்த மண்டபத்தின் இருமருங்கும் நீளப்பாட்டுக்கு சுவர்ப்பக்கமாக ஏழு, ஏழு பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு குரூப் லீடர் இருந்தான். ஒவ்வொரு குழுவுக்குமான பொறுப்பாளனாக இவன் இருந்தான். ஒவ்வொரு குரூப்பிற்கும் அவர்கள் மண்டபத்தில் படுப்பதற்கும், இருப்பதற்கும் எவ்வளவு பகுதியைப் பயன்படுத்தலாம் என்று எல்லைகள் இருந்தது. மண்டபத்தில் நீளப்பாட்டுக்கு தூண்கள் இருந்தது. எனவே, இரு தூண்களிற்கு இடைப்பட்ட தூரம் ஒரு குரூப்பிற்கு உரிய வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்தது. ஏழு பேர் கொண்ட குரூப்பிற்கு தலைவனாக இருப்பவன் தனக்கு கீழ் உள்ள கைதிகளின் மண்டபத்தில் ஏற்படும் நலன்களைக் கவனிப்பவனாக இருந்தான்.
கீழே, "பி வார்ட்" இன் சிறிய விளக்கப்படத்தை பார்க்கவும்.... என்னால் இப்போது நினைவுபடுத்தக்கூடிய விபரங்களை தருகின்றேன்
சிறிது நேரத்தில் 'பி' வார்ட்டின் கதவு திறந்தது. நாங்கள் ஒருவர் பின் ஒருவராக வாசலில் அணிவகுத்து நிற்குமாறு கூறப்பட்டோம், பின் மெதுவாக எமது அணி உள்ளே முன்னேறத் தொடங்கியது. உள்ளே நாங்கள் வருவதை அறிந்த சிங்களக் கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சத்தங்கள், கூச்சல்கள் போட்டபடி 'பி' வார்ட்டின் உள்வாசலில் ஆரவாரத்துடன் கூடிவிட்டார்கள். நாங்கள் நடுக்கத்துடன் உள்ளே சென்றோம். நாம் அனைவரும் உள்ளே வந்ததும் 'பி' வார்ட்டின் இரும்புக் கதவு மூடப்பட்டுவிட்டது. இப்போது எமக்கு எதுவித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எம்மை எவ்வாறு கவனிக்க வேண்டும், எம்மை என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானம் எடுப்பவர்களாக கொடூரமான குற்றங்கள் செய்த சிங்களக் கைதிகளே இருந்த்தார்கள். 'பி' வார்ட்டின் வாசலில் போலிசு காவலும் இல்லை.
இப்போது எம்மை ஒவ்வொருவராக 'பி' வார்ட்டின் வார்டன் ஆன சிங்களக்கைதி ஒருவன் விசாரிக்கத்தொடங்கினான். கொழும்பு பாதாள உலகத்தை சேர்ந்த இவன் சுமார் ஏழு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டிருப்பதாக வேறு ஒரு சிங்களக் கைதி பின்பு எனக்கு சொன்னான். இந்த வார்டனிற்கு பொடிகார்ட்டாக (மெய்ப் பாதுகாப்பாளர்கள்) இவனைப் போல் குற்றம் செய்த சுமார் ஆறு சிங்களக் கைதிகள் இருந்தார்கள். இந்த வார்டனிற்கு அப்போது சுமார் 25 வயது இருக்கும். அவனது மெய்ப்பாதுகாவலர்கள் சுமார் 16 - 25 வயதிற்குட்ட இளைஞர்களாக இருந்தார்கள். வார்டன் எம்மை விசாரணை செய்த அதேவேளை அவனது மெய்ப்பாதுகாவலர்களும் மற்றைய சுமார் நூறு கைதிகளும் எம்மை தனித் தனியே சிறு குழுக்களாக சூழ்ந்து விசாரணை செய்யத் தொடங்கினார்கள்.
இங்கு, பகிடி என்னவென்றால் இந்தச் சிங்களக் கைதிகள் களவு, கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களை செய்த பெரிய குற்றவாளிகள், ஆனால், நாமோ ஒரு அப்பாவிகள்! முதலில் சிறீ லங்கா போலிசு, பின் சிறீ லங்கா அநீதி மன்றத்தின் விசாரணைகளை சந்தித்த நாம் இப்போது சிங்களக் கைதிகளின் விசாரணையையும் முகம் கொடுத்து அவர்கள் கேட்கும் கேள்விகளிற்கு பதில் கூறவேண்டி இருந்தது.
புலிகளுடன் எமக்கு ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என கேட்கப்பட்டோம். புலிகளில் நாம் இப்போது அல்லது முன்பு உறுப்பினர்களாக இருந்தோமா என கேட்கப்பட்டோம். இதைவிட, எம்மை ஒவ்வொருவராக உடற்சோதனை செய்து எமது உடலில் போராளிகள் இராணுவத்துடன் போரிடும் போது ஏற்படக்கூடிய விழுப்புண் அடையாளங்கள் இருக்கின்றனாவா என பரிசோதித்தார்கள். எமது உள்ளங்கைகளை அழுத்தி நாம் ஆயுதங்கள் பாவித்திருக்க கூடுமா எனவும் ஆராய்ந்தார்கள். எம்மை வெருட்டவும் செய்தார்கள். எம்மில் சிலருக்கு சலார், புலார் என்று விசாரணை செய்யும் போது அடிகளும் விழுந்தது. இறுதியில் சுமார் 15 நிமிடங்களின் பின் சிங்களக் கைதிகளின் விசாரணைகள் முடிவுக்குவந்தது. நாம் பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, நான் ஏற்கனவே கூறிய ஏழு பேர் கொண்ட குழுக்களில் சேர்க்கப்பட்டோம். இங்கு குழுக்களில் சேர்க்கப்படும் போது எந்தக் குழுவில் ஏழு பேருக்கு குறைவான உறுப்பினர்கள் இருக்கின்றார்களோ, அவ்வாறு இடவசதி உள்ள குழுக்களில் மட்டுமே நாம் சேர்க்கப்பட்டோம். ஆனால், 'பி' வார்ட் ஏற்கனவே கைதிகளின் கூட்டத்தினால் நிரம்பி வழிந்ததால் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட 18 தமிழ் கைதிகளில் இரண்டு பேருக்கு ஒரு குழுவிலும் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், இவ்விரண்டு தமிழ்க் கைதிகளும் சொல்லொணாத் துன்பங்களிற்கு ஆனார்கள். இவர்கள் மண்டபத்தில் ஆட்கள் போகும் நடைபாதையிலேயே படுத்து உறங்க வேண்டி இருந்தது. இதைவிட, இவர்களது நலங்களை கவனிக்கவென்றோ அல்லது இவர்களிற்கு ஏதாவது உதவிசெய்வதற்கென்றோ ஒருவரும் இருக்கவில்லை.
இங்கு எம்மை தமது குழுக்களில் சேர்க்கும் போது குழுத் தலைவர்கள், எம்மை ஒவ்வொருவராக தோற்றங்களை பார்த்து, விசாரணை செய்து தாம் விரும்பினால் மட்டுமே அவர்களது குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அதாவது இண்டர்வியூ மாதிரி என சொல்லலாம். இந்த குழுத் தலைவர்களை ஒன்றிணைத்து, ஆலோசனைகள் சொல்லும் வேலையை வார்டன் செய்து கொண்டிருந்தான். நானும் ஒரு குழுவில் ஒருமாதிரி சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இறுதியில், எமது குழுத் தலைவன் எம்மை 'பி' வார்ட்டில் தனது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கூட்டிச் சென்றான். எம்மில் நான்கு தமிழர் இருந்தோம், ஏற்கனவே எமது குழுத் தலைவனையும், வேறு இரு சிங்களக் கைதிகளையும் சேர்த்து மொத்தமாக ஏழு பேர் இந்த குழுவில் இருந்தோம். இப்போது எமக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கோயில் மடத்தில் இருப்பது போல் சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தோம். மண்டபத்தினுள் மிகவும் மங்கிய வெளிச்சத்தில் ஓரிரு மின்குமிழ்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.
ஒருவாறாக நாம் இறுதியில் சிறையினுள் கொண்டுவந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டோம். பழைய கைதிகள் விடுதலைபெற்று சிறையைவிட்டு செல்லும்போது அவர்கள் தமது உடமைகளை - துவாய், சாரம், சேட், படுக்கைவிரிப்பு போன்றவற்றை தொடர்ந்து சிறைவாசம் அனுபவிப்பவர்களிற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு போவார்கள். அவ்வாறு முன்பு பலர் பாவித்த பல சாரங்களை நிலத்துக்கு பாயாக போடப்பட்டுருந்தது. எமது குழுத் தலைவனே இவ்வாறு நாம் வீட்டில் படுக்கும்போது கட்டிலில் பெட்சீட், தலையணை போட்டு செட் பண்ணுவதுபோல் எமது ஏரியாவை அனைவரும் படுக்கும்வகையில் ஒழுங்குபடுத்தி இருந்தான். எல்லோரையும் அவன் படுக்குமாறு சொன்னான். படுக்கும்போது உருளுவதற்கோ அல்லது கையைக் காலைத் திருப்புவதற்கோ இடம் போதாது. செத்தபிணங்கள் சவப்பெட்டியினுள் கிடப்பது போல் நாம் எல்லோரும் அருகருகாக நேர்கோட்டில் படுக்க வேண்டி இருந்தது.
நாம் படுத்துள்ள இடம் மிகவும் நாற்றம் அடித்தது. கழிவுக் கால்வாய்கள் - காண் - உள்ள இடத்தில் அடிக்கும் கெட்டவாடை நாம் படுத்துள்ள இடத்தில் வீசியது. எனக்கு அங்கு படுத்திருக்கும்போது மலசலகூடத்தினுள் பாயைவிரித்து படுத்தால் எப்படி இருக்குமோ அவ்வாறான உணர்வு தோன்றியது. வேறு வழியில்லை. ஆளையாள் முறைத்துப்பார்த்துவிட்டு கூரையைப் நோக்கியபடி படுத்துவிட்டோம். நீண்ட பிரயாணம், அலைச்சல்கள், மன உலைச்சல்கள் காரணமாக மிகக் கேவலமான அந்த இடத்திலும் உடனடியாகவே கண்ணைமூடியதும் தூக்கம் வந்துவிட்டது. நாம் நன்றாக ஆழ்ந்ததூக்கத்திற்கு சென்றதும் திடீரென ஒரு பெரிய ஒலி கேட்டு திடுக்கிட்டு எழும்பினோம்.(இந்த ஒலி மணியோசையா அல்லது விசில் சத்தமா என்று இப்போது எனக்கு நினைவில்லை) எழும்பிப்பார்த்த போது அந்த நடுச்சாமத்தில் சிறைக்கூடம் முழுவதுமே விழித்து இருந்தது. எம்மை உடனடியாக எழும்பி லைன் அப் செய்யுமாறு கூறப்பட்டது. எனக்கு என்ன நடக்கின்றது, ஏன் எல்லோரும் லைன் அப் செய்ய வேண்டும் என்று விளங்கவில்லை. உடனடியாக லைனில் (வரிசை) வந்து நிற்காதவர்களிற்கு கொட்டாந்தடியால் மிகக் கடுமையாக அடிவிழுந்தது. அடியின் பயம் காரணமாக ஒரு நிமிடத்தினுள்ளேயே அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நின்றுவிட்டார்கள்.
வார்டின் கையில் ஒரு பெரிய புத்தகத்துடன் நின்றான். நான்கு, ஐந்து போலிஸ்காரரும் ஆயுதங்களுடன் உள்ளே வந்து இருந்தார்கள். இப்போது ஒவ்வொருவரினதும் மண்டையில் தட்டியபடி மிக விரைவாக சிங்களத்தில் நம்பர் சொல்லிக்கொண்டு கைதிகளின் தொகையை ஒருவன் கணக்கெடுத்தான். பின் ஒவ்வொருவராக பாடசாலையில் ஆசிரியருக்கு உள்ளேன் ஐயா என்று கூறுவது போல் இங்கு எமது பெயர் கூப்பிடப்பட்டது. பெயர் கூப்பிடப்படும்போது அந்தந்த பெயர்களிற்குரியவர்கள் தமது கைதி இலக்கத்தை உரத்துக்கூறினார்கள். புதிதாக வந்த எமது பெயர்கள் கூப்பிடப்பட்ட போது எமது கைதி இலக்கங்கள் என்ன என்று எங்களுக்கு கூறப்பட்டு, அடுத்தமுறை எமது பெயர் அழைக்கப்படும்போது நாமும் எமது கைதி இலக்கத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் பொல்லினால் அடிவாங்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டோம். எனக்கு சிங்களம் அப்போது தெரியாது, எனக்கு எனது கைதி இலக்கத்தை சிங்களத்தில் எப்படி சொல்வது என்று ஒருவன் எனக்கு கூறினான். நானும் பயத்தில் அதை சிங்களத்தில் மனப்பாடம் செய்துவைத்தேன். தமது கைதி இலக்கங்களை மறந்த சில சிங்களவர்களிற்கு பொல்லினால் கடுமையான அடிகொடுக்கப்பட்டது. இறுதியில் "பி" வார்ட்டினுள் இருந்த கைதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியபின் போலீசுகாரர் வெளியேறிவிட்டார்கள். கைதிகள் அனைவரும் திரும்பவும் தத்தம் இடங்களிற்கு படுக்கச் சென்றார்கள். இப்படி நடுராத்திரியில் அடிக்கடி கைதிகளை எண்ணும் நடவடிக்கை நடைபெறும் என்பதை எமது குழுத் தலைவன் எமக்கு விளங்கப்படுத்தினான். அவன் சிங்களத்தில் கதைத்தாலும் சிறிதளவு கொச்சைத்தமிழில் கதைத்தான். அவன் நீண்டகாலமாக அடிக்கடி சிறையினுள் இருப்பதால், சிறைக்கு அடிக்கடி வரும் எம்மைப் போன்றவர்களிடம் இருந்துதான் தமிழ் கற்றதாக அவன் எமக்கு சொன்னான். அவன் சிங்களத்தில் கூறியவற்றை எம்மில் உள்ள சிலர் எமக்கு தமிழில் மொழிபெயர்த்து சொன்னார்கள். இவ்வாறு இரவில் கைதிகளின் தூக்கத்தை கலைத்து கணக்கெடுப்பது கைதிகள் சிறையைவிட்டு களவாக ஓடிவிடாதிருக்க செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்தாலும் இந்த நடைமுறை மிருகத்தனமான முறையில் பிரயோகிக்கப்பட்டதால் இது மிகத்திட்டமிடப்பட்ட ஒரு உளவியல் சித்திரவதையாகவே எனக்கு தெரிந்தது. இதை எப்படி விளங்கப்படுத்தலாம் என்றால் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது உங்கள் மீது ஐஸ்-குளிர்தண்ணீரை கொண்டுவந்து கொட்டினால் உங்களுக்கு எப்படி விசர் வருமோ இதைவிட பன்மடங்கு அதிகமான துன்பமாக இருந்தது. இதை நேரில் அனுபவித்தாலே இதன் கொடுமையை புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வளவு நேரமும் கதையில் வந்த சம்பவங்களை ஒரு ஒழுங்குமுறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக எழுதி இருந்தேன். இனி சிறையைவிட்டு வெளியேறும்வரை நான் கூறப்போகும் விடயங்கள் அவை நடைபெற்ற நாட்களின், காலத்தின் வரிசைக்கிரமத்தில் எழுதப்படவில்லை. ஏனெனில், வரிசைக்கிரமம், ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்ற சம்பவங்கள் எனக்கு மறந்துவிட்டது. எனவே, இப்போது என்னால் நினைவுபடுத்தக்கூடியவற்றை வெறும் சம்பவங்களாகவும், வர்ணனையாகவும் எழுதுகின்றேன்.
சிறையினுள் காலை ஐந்து நாற்பத்தைந்து மணியளவில் வெறுந்தேத்தண்ணியும் தொட்டுக் குடிக்க சீனியும் தரப்படும். எமது குழுத் தலைவன் போய் வாங்கிவந்து எமக்கு பகிர்ந்து தருவான். அதற்கு அவன் பாவிக்கும் பாத்திரங்களை பார்ப்பதற்கு நாய் பூனைக்கு நாம் வீட்டில் சாப்பாடு போடும் கிண்ணங்கள் போல இருக்கும்.
தேத்தண்ணி தரப்படும் அதேநேரத்தில் பாணும், மாசிக் கருவாட்டு சம்பலும் தரப்படும். நான் அப்போது மாமிசம் சாப்பிடுவதில்லை. அப்படி பழக்கமும் இருக்கவில்லை. ஆனால், பசி காரணமாக அவற்றை, கிடைப்பவற்றை உண்ண வேண்டி இருந்தது. பாணின் தோற்றம் நாம் வழமையாக ஊரில் வாங்கும் கடைப் பாணில் இருந்து சற்று வித்தியாசமானது. அதாவது ஒரு இறாத்தல் பாணை சரிசமமான நான்கு துண்டுகளாகப் பிரிக்கக்கூடியவகையில் வெளித்தோற்றத்தில் அடையாளம் போடப்பட்டிருக்கும். அந்த அடையாளம் போடப்பட்ட பகுதியூடாக கையால் பிய்க்கும் போது பாண் கால் இறாத்தல் பகுதிகளாக பிய்படும். ஒருவருக்கு காலை உணவாக கால் இறாத்தல் பாண் மட்டுமே வழங்கப்படும்.
பிறகு மதிய உணவு சுமார் பகல் ஒரு மணியளவில் வழங்கப்படும். இதற்கு நாம் நாய், பூனைக்கு சாப்பாடு கொடுக்கும் தட்டுக்கள் போன்ற நாற்றம் மிக்க தட்டுக்களையும், கிண்ணங்களையும் (ஊரில் உள்ள சிரட்டை இதைவிட திறம் என்று கூறலாம்) தூக்கிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நிற்கவேண்டும். முதலில் இவ்வாறான நாற்றம் மிகுந்த தட்டுக்கள் கிடைப்பதே பெரிய விடயம். ஏதோ எமது குழுத் தலைவனின் முயற்சிகாரணமாக எமக்கு ஆளுக்கொரு தட்டு கிடைத்துவிட்டது.
மத்தியானச் சாப்பாட்டில் சோறும், வேறு ஒரு கறியும், ஒரு அவித்த முட்டையும் தரப்படும். இரவுச் சாப்பாடு தரப்படுவதில்லை. எனவே, பலர் மத்தியானச் சோற்றை மிச்சம் பிடித்து, சேமித்து வைத்து இரவில் சாப்பிடுவார்கள். ஆனால், எமது மிஞ்சிய அந்த எச்சில் சோற்றையும் சிலவேளைகளில் நாம் அசட்டையாக இருக்கும் நேரத்தில் வேறு யாராவது களவெடுத்து சாப்பிட்டுவிடுவார்கள்.
நான் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு, இரவுக்காக வைத்திருந்த மிகுதி எச்சில் சோற்றை பல தடவைகள் என்னுடன் இருந்த சிங்களக் கைதி ஒருவனுக்கு கொடுத்திருந்தேன். அவனால் பசியை தாங்க முடியாது. வாய் திறந்து எனது மிச்ச சோற்றை தருமாறு கேட்பான். பாவம் என்று கொடுத்துவிடுவேன். கொடுத்ததுதான் தாமதம் அவுக் அவுக் என்று சில நொடிகளில் அவ்வளவு சோற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவான். இந்தக்கேவலத்தை பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கும். அதாவது வீட்டில் கட்டி வைத்திருக்கும் நாயிற்கு சாப்பாடு போடும் போது அது எவ்வளவு ஆரவாரம் செய்து, அந்தரப்பட்டு விரைவாக பசியில் உணவை உண்கின்றதோ, சரியாக அந்த நிலமையே எமக்கும்!
சிறையில் வேறுபகுதிகளில் இருந்த கைதிகளிற்கு எமக்கு தரப்பட்டதை விட சிறந்த உணவு வழங்கப்பட்டது. அவற்றை அப்போது நாம் பசியில் நாய்களைப்போல், வீணீர் வடித்தபடி, வாய் பார்த்துக் கொண்டு இருந்தோம். உணவு சமைப்பது, பரிமாறுவது எல்லாம் சிறையில் இருந்த கைதிகளே. சில வேளை எம்மைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரும் உறவினர்கள் உணவுப்பண்டங்கள் தரும்போது நாம் எல்லோரும் அவற்றை பிரித்து, பகிர்ந்து உண்போம். சிறையில் தரப்படும் சோற்றினுள் தாராளமாக வஞ்சகமின்றி கற்கள் இருக்கும். இதைவிட, வரிசையில் நிற்கும்போது நெரிசல்பட்டால்(தள்ளுப்படல்) அல்லது வேறு ஏதாவது பிரச்சனை வந்தால் குண்டாந்தடியால் தாராளமாக அடியும் நடக்கும். ஆனால், சாப்பாட்டுக்கு சண்டைபிடித்து அடிவாங்குபவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்களாகவே இருந்தனர். சில வேளைகளில் சோறு மிஞ்சி விட்டால் பின்னேரம் நான்கு மணியளவில் எஞ்சி இருப்பவற்றை அதிட்டம் அடித்து அந்தநேரம் அந்தவிடத்தில் நிற்கும் கைதிகளிற்கு கொடுப்பார்கள்.
ஆனால், சிறைவார்டின், மற்றும் அவனது மெய்ப்பாதுகாவலர்கள் (அவனது வால்கள்) மிகவும் உயர்ந்தவகையான உணவுகளை (சாப்பாட்டு கடையில் கிடைக்கும் புரியாணி போன்ற உணவுகளை) உண்பார்கள். இவர்களிற்கு தினமும் தாராளமாக உணவுகள், குடிபானம், சிகரெட்டு, மற்றும் இதர தேவைகள் சிறையில் இருக்கும் போலிசார் மூலம் எமது "பி" வார்ட்டில் இருந்த பின்பக்க சிறிய யன்னல் ஒன்றின் மூலமாக கொடுக்கப்பட்டு வந்தது. இவர்கள் பாதாள உலக கோஸ்டியை சேர்ந்தவர்கள். எனவே அவர்களது சகல தேவைகளும் கச்சிதமான முறையில் சிறைக்கு வெளியில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டுவந்தது. மேலும், இவர்கள் படுக்கும் மெத்தைகள், தலையணைகள், போர்வைகள், உடுத்தும் உடுதுணிகள் மிகவும் விலை உயர்ந்தவை. இவை எல்லாம் இரகசியமான முறையில் இவர்களிற்காக உள்ளே கொண்டுவரப்பட்டு இவர்கள் ராஜாக்கள் போல உள்ளே இந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். வார்டின், மற்றும் அவனது வால்கள் பெரும்பாலும் அழகிய வண்ணங்களில் ரனிங் சோர்ட்சும், ஆமர்கட் பெனியனுமே போடுவார்கள்.
காலை சுமார் எட்டு மணியளவில் “பி” வார்ட்டின் பெரிய இரும்புக்கதவு திறக்கப்படும். உள்ளே உள்ள கைதிகள் இரும்புக்கதவு மாலை சுமார் நான்கு முப்பது அளவில் மூடப்படும்வரை வெளியில் நிற்கமுடியும். சிறைச்சாலையின் மற்றைய பகுதிகளிற்கு சுதந்திரமாக நடந்துதிரிய முடியும் எனவும் நினைக்கின்றேன். சிறைச்சாலையினுள் ஒரு நூலகமும், இந்துக்கோயிலும் இருப்பதாகவும் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவதாகவும் ஒரு சிங்களக்கைதி சொல்லி இருந்தான். ஆனால் நான் எம்மவர்களுடன் மட்டும் சேர்ந்து திரிந்ததால் எனக்கு அங்கு போவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எம்மவர்கள் பதினெட்டுபேரும் தனியாகப் பிரிந்து ஒரு ஒதுக்குப்புறமாக மரநிழல் ஒன்றின் கீழ்ப்போய் இருந்து அங்கிருந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொருத்தரும் தங்கள் கவலைகளை மற்றவர்களிற்கு சொல்லி பரிமாறிக்கொள்வோம்.
“பி” வாட்டினுள் நடக்கும் கூத்துகளை சொல்லுகின்றேன். கேளுங்கள்… இதன் உள்ளே இருக்கும் போது பெரிய குசினியுள் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும். ஏனென்றால் சிங்கிளக் கைதிகள் சிறிய, சிறிய குழுக்களாகச் சேர்ந்து குடு (போதை – கஞ்சா, அபின் போன்றவை)அடித்துக்கொண்டு இருப்பார்கள். இதன்போது மிகுந்த நாற்றமும், புகையும் ஏற்படும். இதனால் வார்ட் முழுவதும் வீட்டில் சாம்பிராணி புகை காட்டும் போது வருவது போல் ஒரே புகை மண்டலமாக இருக்கும். இவர்கள் டின் பிஸ் (அடைக்கப்பட்ட மீன் ரின்) பேணி போன்ற தோற்றமுடைய பேணிகளினுள் எதையோ ஊற்றி எரிப்பார்கள் (கற்பூரம் கொளுத்துவது போல்). பின் அதனுள் நுகர்ந்து போதையில் இருப்பார்கள். அவர்கள் எப்படி குடு அடிக்கின்றார்கள் என்பதை மிக அருகாக அவதானிக்க விரும்பவில்லை. ஆனால், இதன்போது வரும் நாற்றம் தாங்க முடியாது. சிலர் படுக்கை, சாப்பாட்டு நேரம் தவிர மிகுதி நேரம் அனைத்தும் இவ்வாறு புகைகிளப்பி குடுஅடித்துக்கொண்டே இருப்பார்கள்.
இதைவிட, உள்ளே அனைவரும் புகைக்கும் சுருட்டு போன்ற ஒரு பிரபலமான பதார்த்தம் உள்ளது. இதை புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள அனைத்துக் கைதிகளும் தங்கள் கைகளினாலேயே செய்து சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதாவது ஒரு கடதாசியை சிறிய துண்டாக கிழித்து பின் அதை சுமார் மூன்று அங்குல நீளமுள்ள குழாய் போல உருட்டி (சுருட்டி) அதனுள் புகையிலைத் தூளை போட்டு அடைத்துவிடுவார்கள். பின் படுக்கை, சாப்பாடு தவிர்ந்த மற்றைய நேரங்களில் தாம் செய்த சிகரெட் போன்ற பொருளைப் பற்றவைத்து புகைத்துக்கொண்டு இருப்பார்கள். இதற்கான தூள், மற்றும் குடு போன்றவை போலிசார் மூலம் வார்ட்டின் பின்புறம் இருந்த சிறிய யன்னல் ஊடாக காசுக்கு விற்கப்பட்டு வந்தது. அதாவது இதை வார்டினுள் உள்ள ஒரு முகவருக்கு முதலில் விற்கப்படும். முகவர் மற்றையவர்களிற்கு அவற்றை சில்லறையாக விற்பார். சிறையினுள் பெரும்பாலும் எல்லோரும் ஏதோ ஒருவிதமாக இவ்வாறு தமது குடு, புகைத்தல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக காசு வைத்திருந்தார்கள். இந்தக்காசு இவர்களிற்கு எம்மைப்போன்ற தமிழ்க்கைதிகள் மூலமும் கிடைத்திருந்தது. சிங்களக்கைதிகள் எப்போது பார்த்தாலும் தமிழ்க்கைதிகளை காசுகேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். சிறையினுள் எமக்கு ஏதாவது பிரச்சனைகள் வராமல் தாம் பாதுகாப்பு தருவோம் என்றும், அடுத்தமுறை திரும்பவும் பிடிபட்டு இந்தச் சிறையினுள் வந்தால் எம்மை நன்றாகக் கவனிப்போம் என்றும், சிங்கிளக்கைதிகள் எமக்கு கூறி எம்மிடம் அதற்காக காசு தருமாறு தொல்லைப்படுத்தி வந்தார்கள்.
சிறையினுள் வியாபாரமும் நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் சிங்கிளக் கைதிகளிடமிருந்து பொருட்களை, சேவைகளை பெற்றுக்கொள்ளும் நுகர்வோராக தமிழ்க்கைதிகளே இருந்தார்கள். எமக்கு பாவிப்பதற்கு தேவையான தண்ணீர், பற்பசை, போர்ப்பதற்கு தேவையான பழைய போர்வை, பழைய சாரம், பழையை துவாய், பிஸ்கட் பெட்டிகள், குளிர்பானம் போன்றவை விற்கப்பட்டது. இந்தப் பொருட்கள் எல்லாம் சிங்கிளவர்களிற்கு பின்யன்னல் வழியாக வேறு முகவர்கள் மூலம் கிடைத்திருந்தது.
வார்ட்டினுள் அடிக்கடி சிங்கிளக்கைதிகளிடையே சண்டைகள் ஏற்படும். பெரும்பாலும் ஒருவனது பொருளை இன்னொருவன் களவெடுப்பதனாலேயே இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கும். இறுதியில் வார்டின் வந்து இருவருக்கும் குண்டாந்தடியால் அடிபோட்டு பிரச்சனையை தீர்த்துவைப்பான். அடிவாங்கும் சிங்களவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். மிருகத்தனமான முறையில் வார்டின் அவர்கள் மீது பொல்லினால் உடம்பு முழுவதும் விளாசி அடிப்பான்.
தமிழ் கைதிகள் எதிர்கொள்ளும் இன்னொரு துன்பம் உறவினர் வருகை. உறவினர் வந்தாலும் எமக்கு தொல்லை, வராவிட்டாலும் தொல்லை. உறவினர்கள் வந்தால், அதுபற்றி அறிந்த போலிசும், சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளிடம், உறவினர்களிடம் கேட்டு தமக்கு காசு வேண்டித் தருமாறு சொல்லி தொந்தரவு கொடுப்பார்கள். எம்மைப் பார்க்க உறவினர்கள் வந்தால் ஒரு போலிசுகாரன் அல்லது சிங்களக் கைதி மூலம் எம்மை யாரோ உறவினர் பார்க்க வந்துள்ளார்கள் எனக்கூறி அறிவித்தல் வரும். இவ்வாறு எம்மைச் சந்திக்க யாரோ வந்துள்ளார்கள் என்பதை அறிந்தவுடன் சிங்களக்கைதிகளும், போலிசும் எம்மிடம் வந்து நாயாய் வழிவார்கள். அவர்கள் வாயில் இருந்து எச்சில் ஆறாகப் பாயும். தமக்கு உறவினர்களிடம் கேட்டு காசு கட்டாயம் வாங்கித் தரும்படி கட்டாயப்படுத்துவார்கள். அப்படிச்செய்தால் எம்மை தாம் சிறையில் நன்றாகக் கவனிப்போம் என்று பசப்பு வார்த்தைகள் கூறுவார்கள். தமிழ்க் கைதிகள் பயத்தில் இவர்கள் கேட்டபடி உறவினர்களிடம் காசு வாங்கி கொடுத்துவிடுவார்கள். ஆகக்குறைந்தது ஐம்பது ரூபாயாவது வாங்கிக் கொடுப்பார்கள். காசை கொடுக்கும்போது சிறைவார்டன் மற்றும் சிறையில் கொஞ்சம் அதிகாரம் உடையவர்களிடமே கொடுப்பார்கள். இதன்மூலம் தமது பிரச்சனைகள் சிறையில் ஓரளவுக்காவது குறையும் என்ற எதிர்பார்ப்பே இதற்கான காரணம். மேலும், உறவினர்கள் எமது தேவைக்கு களவாக பணம் தருவதை சிங்களக்கைதிகள் அல்லது போலிசு கண்டுவிட்டால் அதைத் தட்டிப்பறித்து எடுத்து விடுவார்கள். சிறைக்கைதிகளிற்கு உறவினர்கள் பணம் கொடுப்பது சிறை விதிகளிற்கு முரணானது என நினைக்கின்றேன். பலதடவைகள் தமிழ்க் கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் அவர்களிற்கு பணம் கொடுத்தபோது அவற்றை கண்முன்னாலேயே சிங்களவர்கள் தமது சொந்தத்தேவைக்காக பறித்து எடுத்தார்கள். எம்முடன் இருந்த ஒரு தமிழ்க்கைதி உறவினர் ஒருவரிடம் நைசாகப் பணத்தைப் பெற்று, தனது செருப்பினுள் ஒளித்துக் கொண்டுவந்தபோதும், மோப்பம் பிடித்த ஒரு சிங்களக்கைதி அவர் காலினுள் ஒளித்துக் கொண்டுவந்த நூறு ரூபாயைப் பறித்துவிட்டான். இவ்வாறு எமது காசு பறிக்கப்பட்டாலும், அல்லது எமக்கு ஏதாவது தீங்கு இழைக்கபட்டாலும் நாம் பயத்தில் ஒருவரிடமும் முறையிடுவதில்லை. மேலும், அவ்வாறு யாரிடமாவது முறையிட முடியுமா என்றும் எமக்கு தெரிந்திருக்கவில்லை.
உறவினர்களுடன் கதைக்கும் போது ஒரு அறையினுள் கொண்டுபோய் விடப்படுவோம். இந்த அறை சிறை வாயிலிற்கு அருகில் உள்ளது. இதில் நீளமான ஒரு பெரிய மேசை உள்ளது. இந்த மேசையில் எதிர்ப்புறம் உறவினர்களும், இன்னொரு புறம் நாமும் இருப்போம். போலீஸ்காரர் எம்மை அவதானித்துக் கொண்டிருப்பார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் கதைப்பதற்கு அனுமதிக்கப்படும். உறவினர்கள் எம்மைப் பார்த்து அழுதுகொண்டிருப்பதிலேயே பெரும்பாலும் இந்த ஐந்து நிமிடங்களும் கழிந்துவிடும். சிலவேளைகளில், உறவினர்களுடன் கையாலாகாத வழக்கறிஞர்களும் வருவார்கள்.
உறவினர்கள் எம்மைப்பார்க்க வந்தால் எமக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். யாரோ சிறைக்கு வெளியில் இருந்து எம்மை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி எடுக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படும். சிலருக்கு அவர்களை பார்க்க ஒருவருமே வருவதில்லை. சிலருக்கு உறவினர்கள் தம்மை பார்க்கவருவது பிடிக்காது. இப்படி வெவ்வேறு விதமான மனநிலைகளில், சூழ்நிலைகளில் நாம் இருந்தோம். ஆனால், உறவினர்கள் வரும்போது கொண்டுவரும் சாப்பாடு, மற்றும் உடுதுணி போன்றவை எமக்கு பேருதவி புரிந்தது. உறவினர்கள் எம்மைக் கண்டு சென்றதும் சிறையில் உள்ள பல சிங்களக்கைதிகள், மற்றும் போலிசுகாரர் எம்மிடம் வந்து தமக்கு காசு தருமாறு கேட்டு திரும்பவும் தொந்தரவு தருவார்கள். இதனால், எம்மில் சிலர் உறவினர்களிடம் இனி தம்மைப் பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்கள். உறவினர்கள் உணவுப் பண்டங்கள் ஏதாவது தந்தால் நாம் அவற்றை பிரித்து பங்குபோட்டு உண்போம். சிலவேளைகளில் மற்றவர்களை உறவினர்கள் பார்க்கவரும்போது, ஆனால் எம்மைப் பார்க்க ஒருவரும் வராவிட்டால், எமக்கு பெருங் கவலையாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். எம்மில் சிலர் தம்மை தினமும் யாராவது பார்க்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உணவும் உண்ணாது காத்துக்கிடப்பார்கள்.
இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கின்றது... உடனடியாக சொல்ல முடியவில்லை... மெல்ல, மெல்ல கூறுகின்றேன். உங்கள் பொறுமைக்கு நன்றி...
காலையில் எமக்கு நான்கு பேருக்கென பயன்படுத்துவதற்கு ஒரு கலன் தண்ணீர் தரப்படும். அதைவைத்து அன்றைய பொழுதை நான்கு பேரும் சமாளிக்க வேண்டியதுதான். நாங்கள் ஒவ்வொருவரும் வாயை கொப்பளித்து, முகத்தை சாதுவாக தண்ணீரில் நனைக்க மாத்திரமே இந்த தண்ணீர் போதும். மற்றைய சிங்கள கைதிகளிடம் பற்பொடி கொஞ்சம் கடனாக வாங்கி பல் மினுக்குவோம். காசு கொடுத்தால் தேவையான அளவு தண்ணீரை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. குளிக்கவும் முடிந்தது. ஆனால், சிறையினுள் எவராவது குளித்ததை நான் காணவில்லை. சிலவேளைகளில் சிறைவார்டன், மற்றும் அவனது வால்கள் தமது அதிகாரத்தை பாவித்து வீட்டில் தாராளமாக தண்ணீரில் அள்ளி குளிப்பது போல் குளிப்பார்கள். "பி" வார்ட்டினுள் உள்ள தண்னீர் தொட்டிக்கு சிங்களக் கைதிகள் தண்ணீரை வேறு எங்கோ அள்ளிக்கொண்டுவந்து (தயிர் முட்டியை தடியில் இருபுறமும் கட்டி தோளில் வைத்து தூக்கிவருவது போல்) தண்ணீர் தொட்டியை நிரப்புவார்கள். தண்ணீர் தொட்டி நிரப்பும் வேலை தினமும் காலை நடைபெறும். ஆனால், எங்களுக்கு தண்ணீர்தான் கிடைக்கவில்லை.
இனி மலசலகூடத்தை பார்த்தால், இப்போதும் நினைக்கவே வாந்தி வருகின்றது. முதலில் மலசல கூடத்தினுள்ளேயே போகமுடியாது. அதன் வாசலிலேயே மனிதக் கழிவுகள் கழிக்கப்பட்டிருக்கும். கழிகள் மலசலகூட நிலம் எங்கெனும் பரவி அகோரமாகக் காணப்படும். நாற்றம் தாங்க முடியாது. நாமும் நிலத்தில் முழுக்காலையும் பதிக்காது குதிக்காலில் எட்டி நின்று வஞ்சகமில்லாமல் எமது பங்கிற்கு கழிவை தள்ளிவிடுவோம். எமக்கு காலிற்கு போடுவதற்கு செருப்பும் இல்லை. விலங்குகள் எம்மைவிட சுத்தமாக இருந்திருக்கும் என்று கூறலாம். மலசலகூடம் ஏன் ஒழுங்காக துப்பரவு செய்யப்படுவதில்லை என்று தெரியாது. "பி" வார்ட்டினுள் இருந்தது தவிர, நாங்கள் வார்ட்டிற்கு வெளியில் நிற்கும் நேரங்களில் கழிவகற்ற வசதியாக வேறு ஏதாவது மலசலகூடங்கள் சிறையினுள் இருந்ததாகத் தெரியவில்லை. இதனால் மலசலம் கழிப்பதை இயலுமானளவு நாங்கள் தவிர்த்து வந்தோம்.
சிறையினுள் வார்டன் ராசா மாதிரி இருப்பான். அவனைச் சுற்றி அவனது வால்கள் நிற்பார்கள். வார்டன் உயர்தரமான மெத்தையின் மீதே ஏறி இருப்பான். படுப்பதும் அதில்தான். ஏதாவது பிரச்சனை என்றால் மற்றவர்கள் அவன் மெத்தையில் படுத்து இருக்கும் இடத்திற்கு சென்று முறையிட வேண்டும். வால்கள் அமைச்சரவை போல் செயற்படுவார்கள். குறுக்கு விசாரண நடத்துவதும் வால்கள் தான். அரசன் தீர்ப்பை மாத்திரம் கூறுவான். வார்டன் படுத்து இருக்கும் போது நான்கு பேர் அவனுக்கு உடம்பு பிடித்துக்கொண்டு இருப்பார்கள். வலது கையை மசாஜ் செய்ய ஒருவன், வலது காலை மசாஜ் செய்ய ஒருவன், இடது கையை மசாஜ் செய்ய ஒருவன், இடது காலை மசாஜ் செய்ய ஒருவன்... இவ்வாறு அரசனுக்கு மந்திரிகள் சேவகம் செய்வார்கள். அரசன் ஆணையிடும் போது மந்திரிகள் பாட்டுப்பாடி அரசனை மகிழ்விக்கவும் செய்வார்கள். வார்டின் படுக்கும் இடத்திற்கு அருகாக அவனது வால்கள் தவிர்ந்த வேறு கைதிகள் அணுக முடியாது. மற்றவர்கள் அவன் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத் தள்ளியே இருக்கவேண்டும் என்பது அவனது ஆணை.
சில நாட்களில் நாம் சிறைக்கூடத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது அங்க அடையாளங்கள் பதியப்பட்டன. கை, கால்களில் இருக்கும் மச்சம் மற்றும், காயங்கள் காரணமாக வந்த அடையாளங்கள் பதியப்பட்டன. இதன்போது அங்கு ஒரு தமிழ் போலிஸ் அதிகாரியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம். முதலில் சிங்களத்தில் பேச்சுத்தந்த அவர் இறுதியில் ஒரு தமிழரென அறிந்துகொண்டோம். குறிப்பிட்ட அதிகாரி நல்லவர் போல் தோற்றமளித்தார். எம்முடன் உரையாடத்தொடங்கி சிறிது நேரத்தின் பின் சரளமாக ஒவ்வொருவராக விசாரித்து உரையாடினார். எமது நிலமைகளைக் கேட்டு மிகவும் கவலைப்பட்டார். தமக்கு நாம் ஒரு குற்றங்களும் செய்யவில்லை என்று மிக நன்றாகத் தெரியும் என்றும் கூறினார். தாம் மேலிடத்திற்கு குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவி தமிழ் இளைஞர்களை இங்கு அனுப்பவேண்டாம் என்று பலதடவைகள் கூறியும், அவர்கள் தொடர்ந்தும் அப்பாவி தமிழ் இளைஞர்களை பிடித்து இங்கு அனுப்புகின்றார்கள் எனக்குறைகூறிக் கொண்டார். இவரது பேச்சைக் கேட்ட எமக்கு சிறிதளவு ஆறுதலாக இருந்தது. சில மணிநேரங்களில் எமது அடையாளங்கள், மற்றும் வயது, பால், அப்பா, அம்மா பெயர்கள், ஊர், விலாசம், பிடிக்கப்பட்ட காரணம் என ஒரு நீண்ட பட்டியல் கேள்விகள் கேட்கப்பட்டு விடைகள் நிரப்பப்பட்டபின் நாம் எமது வார்ட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டோம்.
எம்முடன் பிடிபட்ட பலரில் ஒருவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த துணிவுமிக்க இளைஞர். அவருக்கு அப்போது சுமார் முப்பது வயது இருக்கும். மற்றவர்கள் போல் அல்லாது சிறிது வித்தியாசமாக இருந்தார். பல தடவைகள் சிறைவார்டனிற்கு பல விசயங்களில் அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நாமும் இதைப் பெரிதாகக் கணக்கில் எடுக்கவில்லை. ஆனால், அன்று இவர் வார்டனுடன் எக்கச்சக்கமாக வாக்குவாதப்பட்டு கொழுவிவிட்டார். நிலமை மோசமாகிவிட்டது. இறுதியில் வார்டனுடன் "பி" வார்டினுள் அடிபாடு செய்வதற்கு தயாராகிவிட்டார். வார்டும் வெளிவாயில் கதவு மூடப்பட்டுவிட்டது. ஆபத்திற்கு நாம் வெளியில் ஓட முடியாது. போலிசு பாதுக்காப்பும் எமக்கு இல்லை. சிங்களக்கைதிகள் எம்மைத் தாக்கினால் எம்மை நாம் பாதுகாப்பது தவிர வேறு ஆயுதமோ அல்லது உதவியோ ஒன்றும் எம்மிடம் இல்லை. இந்நிலையில் சண்டை முற்றிவிட்டது. நாம் கை, கால் நடுங்க என்ன நடக்கப்போகின்றதோ எனப் பயந்துகொண்டிருந்தோம். ஆனால், குறிப்பிட்ட தமிழ் இளைஞர் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களக்கைதிகள் சுற்றிநிற்க வார்டனுடன் பயமின்றி வாக்குவாதப் பட்டுக்கொண்டு இருந்தார். நாம் சற்று தள்ளி நின்று நடப்பதை அவதானித்துக் கொண்டு இருந்தோம். இறுதியில் வார்டன் தன்னுடன் நேரடிச் சண்டைக்கு வருமாறு குறிப்பிட்ட தமிழ் இளைஞருக்கு அழைப்புவிடுத்தான். அவரும் உடனே பயமின்றி சாரத்தை மடித்து கொடுக்கு கட்டியபின், நிலை எடுத்து நேரடிச் சண்டைக்கு தயாரானான். வார்டன், சண்டையின்போது அவருக்கு கை, கால்கள் உடைக்கப்படும், இரத்தம் கொட்டும், சிலவேளைகளில் அவரது உயிருக்குகூட ஆபத்து வரும் என வெருட்டினான். ஆனால், அவரோ அவன் கூறிய அதே பதிலை திருப்பி அவனுக்கு கூறி, தான் எதற்கும் தயார் எனச் சொல்லியபடி வார்டனை அடிப்பதற்க்காக நெருங்கிச் சென்றார். இதனால் சிறையில் பதற்றம் கூடிவிட்டது. அனைத்து சிங்களக்கைதிகளும் இருவரையும் சுற்றுநின்று என்ன நடக்கப்போகின்றது எனப் பார்த்துக் கொண்டிருந்தனர். பலருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், ஒருவருக்கும் வார்டனுடன் அடிபடுவதற்கு துணிவு வராது. வார்டனின் வால்களும் இப்போது குறிப்பிட்ட தமிழ் இளைஞனை பார்த்து பயந்தபடி தள்ளி நின்றார்கள். வார்டன் சண்டையை ஆரம்பிப்பதற்கு ஒன்று, இரண்டு, மூன்று என உரக்கக்கூறிவிட்டு இறுதியில் திடீரென தமிழ் இளைஞனின் காலில் விழுந்து அட்டாங்க நமஸ்காரம் செய்து, தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். கொச்சைத் தமிழில் கதைத்தான். அண்ணே நான் உங்களுடன் அடிபடவில்லை என்று கூறினான். இதனால் எல்லோருக்கும் பேராச்சரியம் தோன்றியது. இனி குறிப்பிட்ட தமிழ் இளைஞரை தான் ஒன்றும் கேட்கமாட்டேன் என்றும், அவருக்கு சிறையினுள் சகல சுதந்திரங்களும் வழங்கப்படும் என்றும், தாம் இருவரும் இனி நண்பர்கள் என்றும் அனைவரினதும் முன்னிலையில் வார்டன் அறிவித்தான். அடுத்தநாள் குறிப்பிட்ட தமிழ் இளைஞர் எம்முடன் கதைத்தபோது தான் ஏன் அப்படி செய்தேன் என்று சொன்னார். தான் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னை தேவையில்லாமல் சிறையில் அடைத்துவைத்துள்ளார்கள் என்றும், ஆனால் தான் சிறைக்குவந்தபின் ஒன்றுக்கும் இப்போது பயப்படவில்லை என்றும் கூறினார்.
கிழமை நாட்களில் (வேலை நாட்களில்) தினமும் அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் எமது வார்ட்டினுள் நுழையும் பொலிசார் அன்றைய தினம் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலை வாசிப்பார்கள். பிணைமூலம் விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்ப்பட்டியலும் இந்த நேரத்தில் வாசிக்கப்படும். இதனால், நாங்கள் கிழமை நாட்களில் தினமும் எமது பெயர்கள் வாசிக்கப்படுகின்றதா என்பதை அறிய அதிகாலையில் ஆவலுடன் காத்திருப்போம்.
பெயர்ப் பட்டியலில் தமது பெயர் வந்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்துவிடுவார்கள். அவர்களிற்கு வார்ட்டினுள் உள்ள நீர்த்தொட்டியில் முகம் கழுவுவதற்கு சிறப்பு தண்ணீர் சலுகை உண்டு. ஏனெனில், வார்டனின் முன் அனுமதியின்றி எல்லாரும் தண்ணீர் தொட்டியில் போய் தண்ணீர் எடுக்கமுடியாது. முகம் கழுவியதும் தம்மிடம் உள்ளதில் ஓரளவு அழகான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். சிலர் மற்றவர்களிடம் ஆடைகளை இரவல் வாங்கி அணிவார்கள். சிறையினுள் காசுப் புழக்கம் உடையவர்கள் (பாதாளக் கோஸ்டி) முகச்சவரம் எல்லாம் எடுத்து, அழகிய ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சில வேளைகளில் பெரிய உத்தியோகத்தர்கள் மாதிரி டை கூட கட்டிக்கொள்வார்கள்.
சுமார் ஆறு மணியளவில் இவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். மற்றவர்கள் இவர்களை ஆ வென்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள். எமக்கு இவர்கள் போல் நாம் எப்போது வெளியில் கூட்டிச் செல்லபடுவோம் என்று மனதில் ஏக்கமாக இருக்கும். பிணையில் செல்பவர்கள் மற்றைய கைதிகளை கட்டித் தழுவி பிரியாவிடை சொல்லிச் செல்வார்கள். சிலர் தமது வீட்டு முகவரிகளை கொடுத்து வெளியில் செல்லும் கைதிகளிடம் உதவிகள் கேட்பார்கள்.
எம்முடன் இருந்த சில தமிழ்க்கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருந்தார்கள். இவர்கள் பிணைமூலம் வெளியில் வரமுடியாமைக்கான காரணம், இவர்களிற்காக வெளியில் இருந்து செயற்படக்கூடிய ஒரு நபர் இல்லாமை. அதாவது ஒருவரை பிணையில் எடுப்பது என்றால் ஒரு வழக்கறிஞர் வேண்டும். அவருக்கு அப்போது சுமார் 5000 ரூபாய்கள் காசு கொடுக்க வேண்டும். மேலும் தொடர்பு முகவரிகள், மற்றும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் என்று யாராவது இருக்கவேண்டும். இவை இல்லாத நிலையில் ஒருவர் நீதிமன்றத்தினால் வழக்கில் குற்றவாளி இல்லை என்று அறிவிக்கப்படும்வரை சிறையைவிட்டு வெளியில் வரமுடியாது.
ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், ஒரு தமிழர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டால் அவர் நிரபராதி என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில் அல்லது குற்றச்சாட்டுக்கள் பொலிசாரினால் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில், நீதி மன்றத்தினால் விடுவிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது ஆறு மாதங்கள் தொடக்கம் முன்று வருடங்கள் வரையாகும். சிலருக்கு இந்த கால எல்லை 5, 7 வருடங்களாகக் கூட இருக்கும். இந்தக் காரணத்தால் தமிழரைப் பொருத்தவரை பிணை - Bail என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
எனினும், ஏழ்மையில் உள்ள மற்றும் உறவினர்கள், அறிந்தவர்களுடன் வெளித் தொடர்புகள் அற்ற தமிழ் கைதிகள் பிணை மூலம் வெளியில் வரமுடியாமல் இருப்பதால் அவர்கள் பல வருடங்களாக சிறையினுள் இருந்து தவிக்க வேண்டி இருக்கின்றது. அவர்களிற்காக பரிந்து பேசுவதற்கோ அல்லது அவர்களிற்காக காசு கொடுத்து அவர்களை வெளியில் எடுப்பதற்கோ ஒருவரும் இல்லை. இந்த இக்கட்டான நிலமையில் உள்ள ஒரு தமிழ்க்கைதி எங்கள் "பி வார்ட்டில்" இருந்தார். அவரைப் பார்க்க கவலையாக இருந்தது. எம்மால் அவருக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் சிறைவாழ்க்கை பழகிவிட்டதால், மிருகங்கள் போல் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் மெளனமாக எதுவித எதிர்ப்பையும் காட்டாது தனது வாழ்க்கையை கழித்து வந்தார்.
அந்த சந்தோசமான செய்தி அன்றொரு நாள் அதிகாலை எமக்கு கிடைத்தது. நாம் சிறீ லங்கா அநீதிமன்றத்தின் கட்டளைப்படி பிணையின் மூலம் விடுதலை செய்யப்படுவதற்கு ஆவண செய்யப்பட்டோம். எம்மை சிறையில் தள்ளிய தினத்தில் இருந்து கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகளின் உறவினர்கள் பலர் பலவிதமாக எம்மை பிணை மூலம் வெளியே கொண்டுவருவதற்கு முயற்சி செய்திருந்தார்கள். ஆனால், ஆரம்பத்தில் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆனால், தமிழ் கைதிகளின் உறவினர்கள் தினமும் எம்மை பிடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று அந்த ஸ்டேசனின் தலைமை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவும், தினமும் அவனை தொலைபேசியில் தொல்லைப் படுத்தியதன் காரணமாகவும். இறுதியில் அவன் பிணைமூலம் எம்மை வெளியே எடுப்பதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டைகளை விலக்கிக் கொண்டான்.
காலையில் எமது பெயர் வாசிக்கப்பட்டதில் இருந்து எமக்கு எல்லோருக்கும் நல்ல சந்தோசம். ஆனால், பிரச்சனை என்னவென்றால் போடுவதற்கு ஒழுங்கான உடுப்பு இல்லை. நாம் எல்லோரும் தெருவில் நிற்கும் பிச்சைக்காரங்கள் போடுவது போன்ற நாற்றம் மிக்க கேவலமான உடுப்புகளை போட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லை. களவு போய்விட்டது. எமது கோலம் பார்ப்பதற்கு மிகவும் மோசமாய் இருந்தது. ஆனாலும், இனியென்ன? வீடு சென்று உடுப்பை மாற்றுவது தானே என்ற ஆறுதலுடன் மனதை சாந்திப்படுத்திக் கொண்டோம்.
நாம் வெளியே போகப் போகின்றோம் என அறிந்ததும் சிங்கள கைதிகள் எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தர வேண்டும் என வற்புறுத்தினார்கள். போலீசுகாரரும், காவலாளிகளும், வார்டனும் ஒவ்வொருவராக எம்மிடம் வந்து நாம் வெளியே போனதும் தமக்கு காசு தரவேண்டும் எனவும், அப்போதுதான் நாம் அடுத்தமுறை பிடிபட்டு சிறையினுள் வரும்போது எம்மை தாம் நல்ல முறையில் கவனிப்போம் என்றும் கூறினார்கள். எமக்கும் அந்த நேரத்தில் நாம் மீண்டும் சிறைக்கு வரக்கூடும் போன்ற உணர்வு தோன்றியது. இதனால், அவர்கள் கேட்டபடி காசு தருவதாக வாக்குறுதி அளித்தோம்.
காலை சுமார் ஏழு மணியளவில் நாம் மற்றைய கைதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறை வாயிலுக்கு அருகில் இருந்த ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு பல விசாரணகள், கேள்விகள் கேட்கப்பட்டன (இவை இப்போது எனக்கு நினைவில் இல்லை). கடைசியில் எமக்கு மீண்டும் விலங்குகள் மாட்டி அநீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், சில தமிழ் கைதிகள் "நாங்கள் இப்போது பிணையில் விடுவிக்கப் படப்போகின்றோம் தானே, எனவே ஏன் எங்களுக்கு மீண்டும் விலங்கு மாட்டுகின்றீர்கள்?" என கேட்டு வாதிடதொடங்கினார்கள். இந்த நேரத்தில் எம்மிடம் இருந்து காசு வாங்கவேண்டிய தேவை (கையூட்டு) போலிசாருக்கு இருந்ததால் அவர்கள் நாங்கள் சொன்னதை உடனடியாக கேட்டார்கள். அவர்கள் எம்முடன் இப்போது மிகவும் சினேகபூர்வமாக மாறிவிட்டார்கள். ஏனெனில், நாம் விரைவில் அவர்களிற்கு கையூட்டு கொடுக்கப்போகின்றோம் என்ற சந்தோசத்தில் இருந்தார்கள். எனவே, போலிசார் எம்மிடம் "சரி சும்மாவா வரபோறீங்கள்?" என்று கொச்சைத் தமிழில் கேட்டுவிட்டு (அதாவது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டப்படாது) "சரி.. நீங்க சும்மா வரலாம், ஆனா தப்பி ஏதாவது யாராவது போனா, பிறகு திருப்பி இங்க இருக்க வேண்டியதுதான்!" இவ்வாறு எச்சரிக்கை தந்துவிட்டு, லொறி போன்ற ஒரு வாகனத்தில் எம்மை ஏற்றினார்கள்.
வாகனத்தில் நாம் எல்லோரும் பின்னால் இருந்தோம். எம்முடன் நான்கு போலீசுகாரர் ஆயுதங்களுடன் காவலுக்கு பின்னால் இருந்தார்கள். அவர்கள் எம்முடன் பகிடிகள் விட்டு சந்தோசமாக இருந்தார்கள். ஏனெனில், நாம் எல்லோரும் குறிப்பிட்ட அந்த போலிசுகாரரிடம் அநீதிமன்றத்திற்கு சென்றதும் உறவினர்களிடம் காசு வாங்கி கொடுக்கவேண்டும் என சிறையில் சிங்கள குண்டர்களினால் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காவலுக்கு வந்த போலிசுகாரர் எம்மிடம் நாயாய் வழிந்தார்கள். "அட தூ!" என்று அவர்களின் மூஞ்சையில் காறித் துப்ப வேண்டும் போல இருந்தது.
வாகனம் மகர சிறையில் இருந்து வெளியேறி சில மணித்தியாலங்களின் பின் (நான் நினைக்கின்றேன், சிறீ லங்கா அநீதி மன்றத்தை சென்றடைய சுமார் நான்கு மணித்தியாலம் நேரம் பிடித்தது என்று.. சரியாக நினைவில் இல்லை) அநீதி மன்றத்தை - அதாவது எம்மை சிறைக்கு ஆரம்பத்தில் அனுப்பிய அநீதிமன்றத்தை சென்றடைந்தோம். அங்கு motion - பிணை பத்திரத்தில் நாம் ஒவ்வொருவராக கையெழுத்திட்டதும் விடுவிக்கப்பட்டோம். சிறீ லங்கா அநீதிமன்றத்தில் எமது ஏராளம் உறவினர்கள் எமது வருகைக்காக காத்திருந்தார்கள். அநீதிமன்றத்தில் நாம் விடுவிக்கப்படும் போது சிறீ லங்கா அநீதி மன்றத்தினால் சில நிபந்தனைகள் எமக்கு விடுக்கப்பட்டன. அவை...
1. நாம் தினமும் மாலை நான்கு மணிக்கு எம்மை கைது செய்த போலீசு ஸ்டேசனுக்கு சென்று கையெழுத்து இடவேண்டும்.
2. நாம் சிறீ லங்காவை விட்டு வெளியேற முடியாது.
3. எமது வழக்கு மூன்று மாதங்கள் தள்ளி மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது. இந்த விசாரணை தேதிக்கு நாம் எல்லோரும் - 18 பேரும் சமூகம் தரவேண்டும்.
4. போலிசார் விரும்பும் பட்சத்தில் நாம் எந்த நேரமும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம்.
எமது இந்த விடுவிப்பு தற்காலிகமானதாக இருந்தாலும் சிறையை விட்டு வெளியே வந்து மூச்சு எடுப்பது மனதில் மகிழ்ச்சியை தந்தது. எம்மை கண்ட உறவினர்கள் எல்லோரும் எமது மோசமான கோலங்களை பார்த்துவிட்டு சத்தம் போட்டு, ஒப்பாரி வைத்து அழத்தொடங்கி விட்டார்கள். நாம் எல்லோரும் தாடிகள், மீசைகளுடன் சாமியார் கோலத்தில் காட்சி கொடுத்தோம். நான் வெறுங்காலுடன் நிற்பதை கண்ட உறவினர் ஒருவர் எனக்கு உடனடியாக அருகில் இருந்த ஒரு கடையில் Bata செருப்பு ஒன்று வாங்கி தந்தார். வயிறு சரியான பசி. என்னை உடனடியாக அருகில் உள்ள ஒரு சாப்பாட்டு கடைக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டியும் வாங்கித் தந்தார். இதில் பகிடி என்னவென்றால், நாங்கள் ஒருவரும் போலிசாருக்கு கையூட்டு கொடுக்கவில்லை. அவர்களிற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நாங்கள் ஆளாளுக்கு எம்மை தேடி வந்த உறவினர்களுடன் ஒவ்வொரு திசைகளில் வீடுகளிற்கு கிளம்பிவிட்டோம். சிறை போலிசார் காசு - கையூட்டு கிடைக்காததையிட்டு ஏமாற்றமும், எம்மில் கோபமும் அடைந்தனர்.
வீட்டிற்கு போனதன் பின்புதான் எனக்கு என்னென்ன சனியன்கள் பிடித்துள்ளது என்று தெரியவந்தது. குளிப்பதற்கு முன் கண்ணாடிக்கு முன் நின்று எனது உருவத்தை பார்த்தபோது என்னாலேயே என்னை நம்பமுடியவில்லை. யாரோ மாதிரி - தெருப்பிச்சைக்காரன் மாதிரி இருந்தது. கிலோ கணக்கில் உடம்பில் படிந்திருந்த ஊத்தைகளை மணித்தியாலக் கணக்கில் தேய்த்து குளித்தபின் சிறிது ஆறிவிட்டு உறங்கிவிட்டேன்.
சாமத்தில் தூக்கம் கலைந்தது. திடுக்கிட்டு எழும்பினேன். நான் படுத்திருக்கும் போது என்னை அறியாமல் ஏதேதோ சொல்லி பிதற்றுவதாய் வீட்டுக்காரர் சொன்னார்கள். எனக்கு தூக்கத்தால் எழுந்ததும் நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருக்கின்றேனா அல்லது கொழும்பில் இருக்கின்றேனா அல்லது சிறையினுள் இருக்கின்றேனா என உடனடியாக தெரியவில்லை. சிறிது நேரம் கட்டிலில் இருந்து யோசிக்க வேண்டி இருந்தது. மலசலகூடத்திற்கு செல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால், உடனடியாக போகமுடியவில்லை. ஏனென்றால், நான் தற்போது எங்கு இருக்கின்றேன் என எனக்கு தெரியவில்லை. இறுதியில் ஒருவாறாக நான் சுதாகரித்து என்னிலை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இரவில் சில மாதங்கள் படுத்திருக்கும் போது பிதற்றுதல், திடீரென்று எழும்பியபின் பிறகு எங்கு இருக்கின்றேன் என்று தெரியாமல் முழுசிக்கொண்டு இருத்தல்... இப்படி பல உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டது.
இதைவிட முகம், முதுகு தோல்களில் பருக்கள் போட்டு (சின்னம்மைக்கு வருவது போன்று...) பார்ப்பதற்கு அகோரமாக இருந்தது. இந்த தோல் வியாதிகள் மாறுவதற்கு பல வருடங்கள் சென்றது.
எமது வழக்கு சுமார் இரண்டு வருடங்களிற்கு மேல் இழுபட்டது. ஒவ்வொரு முறையும் தவணை போடும்போது, வாழ்க்கை சீ என்று இருக்கும். ஒவ்வொரு முறையும் சிறீ லங்காவின் அநீதிமன்றத்திற்கு போவதற்கு முன் முதல்நாள் இரவு நம்முடன் பிடிபட்ட மற்றையவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்கள் நாளை அநீதிமன்றத்திற்கு வருகின்றார்கள் என்பதை உறுதி செய்துகொள்வோம். ஏனெனில், ஒருவர் வராவிட்டாலும், எமக்கு அநீதிமன்றத்தில் பிரச்சனை வந்துவிடும். ஒருவர் வராததை காரணம் காட்டி வழக்கை இன்னொரு நாளுக்கு தள்ளிவிடுவான்கள் (நாங்கள் எல்லாமாக 18 ஒன்றாக பிடிக்கப்பட்டு, ஒன்றாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தோம்). ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளான நாங்கள் கொலைகாரர், கொள்ளைக்காரர், திருடர்கள், பெண்களை கற்பழித்த அயோக்கியர்கள் கூடும் அநீதிமன்றத்தில் ஒன்றாக வைத்து விசாரிக்கப்பட்டோம். இது என்னை மிகவும் பாதித்தது.
இறுதியில் பல துன்பங்களை அனுபவித்தபின், ஒருவாறாக சுமார் இரண்டரை வருடங்கள் சொச்சத்தின் பின் நாங்கள் நிரபராதிகள் என தீர்ப்பு தரப்பட்டு அநீதிமன்றத்தின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டோம். விடுதலையை சிங்களத்தில் நிதாஸ் என்று சொல்வான்கள் என நினைக்கின்றேன். நாங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டோம் என அறிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சந்தோசப்பட்டோம்.
சில தனிப்பட்ட காரணங்களால் சில விடயங்களை நான் இங்கு எழுதவில்லை. ஆனால், வெளிஉலகிற்கு சொல்லவேண்டிய சுமார் 95% செய்தியையும் நான் இந்த கதையில் கூறிவிட்டேன். என்னைப்போல் ஆயிரம், ஆயிரம் அப்பாவி தமிழ் இளைஞர்கள் எனது அனுபவத்தை விட மிகவும் பயங்கரமான அனுபவங்களையெல்லாம் சிறீ லங்கா சிறைகளில் பெற்று இருப்பார்கள். இப்போதும் கூட ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறீ லங்கா சிறைகளில் இருந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!
சிறைக்குபோய் வந்ததாலும், அதனால் எனக்கு ஏற்பட்ட நேரடியான, மற்றும் மறைமுகமான உடல், உளவியல் பாதிப்புக்களாலும் நான் வாழ்க்கையில் அதளபாதாளத்தினுள் தூக்கிவீசப்பட்டேன். எனது வாழ்க்கையை மறுசீரமைக்க பல வருடங்கள் எடுத்தது. வேறு என்னத்தை கூறுவது?
இத்துடன் சுமார் ஐந்து மாத காலமாக இழுபட்டு வந்த இந்த தொடர்கதை நிறைவுக்கு வருகின்றது. கதையை வாசித்து தொடர்ந்து கருத்துக்கள் கூறிவந்த கந்தப்பு, மற்றும் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும், மற்றும் வாசகர்களிற்கும் மிக்க நன்றிகள்!
நன்றி! வணக்கம்
இந்த ஆக்கத்தை பிரசுரிக்க அனுமதி அளித்த நண்பர் கலைஞனுக்கு நன்றிகள் இந்த கதை சம்பந்தமான கருத்தாடல்களுக்கு
http://www.yarl.com/forum3/index.php?showtopic=19439&st=80
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்படி ஒரு ஆக்கத்தை நீளமாக போட்டுவிட்டீர்களே??
வாசிக்க கஸ்டப்படுவார்கள்.
பகுதிகளாக்குங்கள்
Is this cingalese writing? I like it!
Greetings from Chile.
Visit me and give me greating on your own language, if you want.
Peace...
DEAR eduardo waghorn
thanks for ur comment this is Tamil for sure i will do that
Post a Comment