Monday, July 16, 2007

புலிகள் எங்கள் தொப்புள்கொடி உறவு! தமிழீழ போராட்டம் வெற்றி பெற வேண்டும்!

அகில இந்திய மீனவர் சங்க தலைவர்

இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அந்தச் செவ்வியின் முழு விபரம்:


செய்தியாளர்: இராமேஸ்வரம் அருகே ஜூன் 17ம் திகதி சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் குண்டு வீசி தாக்கப்பட்டதாக அறிகின்றோம். அதை பற்றி விபரங்களை கூற முடியுமா?

கோமஸ்: கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினைகின்றோம். இந்த நிகழ்சி தொடர்பாக இலங்கை அரசு அவர்களின் தந்திர புத்தியால் இந்தியாவில் இருக்கும் அதிகாரிகளை புலிகள்தான் தாக்கியதாக சொல்ல வைத்திருகிறார்கள். எங்களை பொறுத்தவரை தமிழக மீனவர்கள் 83 முதல் இலங்கை கடற் படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஊனமுற்று தொழில் செய்ய முடியாதவாறு செய்யப்பட்டிருகின்றார்கள். உலகில் எந்த நாட்டிலும் எந்த பகுதியிலும் நடக்காத ஒன்று ஒரு நாட்டின் குடிமக்களை இன்னொரு நாட்டின் கப்பற்படை தாக்கியதாக நாம் அறியவில்லை. ஏனோ தெரியவில்லை, நம் இந்திய அரசங்கம் சம்பவம் நடக்கும் போது இனிமேல் நடக்காது என சொல்லுவதோடு விட்டுவிடுகின்றது. 83 முதல் தமிழக பத்திரிகையில் செய்தியாக வந்து கொண்டிருகின்றது. அரசியல்தான் இப்படி இருக்கின்றது என்றால் தமிழக மக்களும் இப்படி இருகின்றார்கள் என்பதுதான் எனக்கு மிகுந்த வருத்தமாக இருகின்றது. சுட்டு கொல்லப்பட்ட மீனவர்கள் தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு வருவதில்லை என்பது வருத்தமளிகின்றது. ஒரு கட்டத்தில் நாம் இந்திய குடிமக்களா என கேட்கக்கூடிய நிலையில் சம்பவங்கள் நடந்து கொண்டிருகின்றன. இதற்கு காரணம் கச்சதீவை இலங்கைக்கு இந்தியா விட்டு கொடுத்ததே. கச்சதீவை தாரைவார்த்த போது ஏற்பட்ட அரசியல் எதிர்புகளை மீறி தாரைவார்த்தது இந்தியா. கச்சதீவு கொடுக்கப்பட்ட பின்னர் அதன் ஒப்பந்த சரத்துகள் மீறபடுகின்றன. ஒப்பந்தம் மீறப்படுகின்றது என்ற வகையில் கச்சதீவை மீண்டும் மீட்டெடுக்கலாம், அல்லது கச்சதீவை குத்தகைக்கு எடுத்து எமக்கு உதவலாம். இலங்கை மீனவராக இருக்கட்டும், தமிழக மீனவராக இருக்கட்டும் அந்த பகுதியிலே மீன் பிடிக்க பாதுகாப்பு தரவேண்டும். கடல் எல்லோருக்கும் பொதுவானது என்பது என் கருத்து. இங்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் தமது அரசியல் விளையாட்டுகளை தமிழக மீனவர்களின் உயிர்களில் விளையாடுவது வருத்தமளிகின்றது

செய்தியாளர்: நான் உங்களிடம் ஆரம்பத்தில் கேட்ட கேள்வியின் பிரகாரம் ஜூன் மாதம் 17ம் திகதியும் சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்களின் படகுகள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருந்தார்கள். அதில் 4 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். அதனை பற்றித்தான் கேட்டிருந்தேன். என்றாலும் நீங்கள் கூறிய விடயங்களையும் தொடர்ந்து கேட்க இருந்தேன். அண்மையில் சிங்கள மீனவர்களால் தக்கப்பட்டு காயமடைந்த மீனவர்களை நீங்கள் சந்திக்ககூடியதாக இருந்ததா?

கோமஸ்
: நான் அவர்களை இன்றுவரை சந்திக்கவில்லை. சிங்கள மீனவர்கள் தமிழக மீனவர்களை தாக்கியதை பார்க்கும் போது, இலங்கை மீனவர்களை பொறுத்தமட்டில் சிங்கள மீனவர்களாக இருக்கட்டும் தமிழ் மீனவர்களாக இருக்கட்டும் இஸ்லாமிய மீனவர்களாக இருக்கட்டும் தமிழக மீனவர்களுக்கு எதிராக இருந்ததில்லை. இந்த சம்பவமானது அண்மையில் நடந்த கொலை கடத்தல் நாடகங்களை போன்று மீனவர்கள் என்ற பெயரில் இலங்கை அரசோ அல்லது வேறு யாரோ நடத்தியிருபதாகவே சந்தேகிக்கின்றோம். தாக்குதல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீனவர்களை காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு

செய்தியாளர்
: தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிங்கள படையினரால் இப்படியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களின் வலைகள் அறுக்கப்படுவதுமான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருகின்றன. நீங்கள் மீனவ சங்க தலைவர் என்ற முறையிலும் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பலதடவை எடுத்து கூறி இருந்தீர்கள். ஏன் தமிழக அரசு இச்சம்பவம் தொடர்பாக ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுக்காமல் அல்லது ஏன் மத்திய அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்காமல் இருகின்றது?

கோமஸ்
: தமிழகத்தை பொறுத்தவரை நான் இதை அரசியல் பேசுவதாக எடுத்துகொள்ள கூடாது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பம் முதலே தமிழக மீனவர்களை தமது எதிரியாகவே பார்கின்றார். ஒருபக்கம் சிங்கள கப்பற்படையால் தாக்கப்பட்டும் மறுபக்கம் சிங்கள மீனவர்களால் தாக்கப்பட்டும் மறுபக்கம் தமிழக மீனவர்கள் தமது வாழ்வை இழந்து கொண்டு இருகின்றனர். ஏனென்றால் ஒரு பக்கம் சேது கால்வாய் திட்டம் என கொண்டுவந்து மீனவர்கள் ஒட்டு மொத்தமாக தமது தொழிலை இழக்ககூடிய நிலமை, மறுபக்கம் அணு மின் நிலையம், சுனாமிக்கு பின்னால் சுனாமியை காட்டி பயமுறுத்தி கொண்டு கடற்கரையை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற சதி, உலக வங்கியின் சதியின் மூலம் மீனவர்களை அப்புறப்படுத்தும் முயற்சி நடந்து வருகின்றது. இன்று அரசாங்கம் மீனவத் தொழிலை சமுகம் சார்ந்த தொழிலாக இல்லாமல் துறைமுகம் சார்ந்த தொழிலாக மாற்ற முயற்சி எடுத்து வருகின்றது. மீனவ சமுகத்துக்கு ஏற்ற சட்டமன்ற நாடாளமன்ற பிரதிநித்துவம் இல்லை அல்லது ஏற்படுத்தி தரவில்லை. பல்வேறு கமிஷன்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் எதுவும் செயற்படுவதில்லை. மத்திய அரசை ஆட்டுவிக்கும் பலம் உடையவர்கள் தமிழக மீனவர்களை கண்டு கொள்வதில்லை. சுனாமிக்கு பின்னரான உதவிகளை கூட செய்ய முன்வராத இவர்கள் எப்படி இலங்கை பிரச்சினையில் கண்டு கொள்வார்கள்? தமது குடும்பப் பிரச்சினை வரும்போது மத்திய அரசின் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவோம் என மிரட்டுபவர்கள், இந்திய அரசை ஆட்டுவிக்கும் பலம் இருக்குது என இருக்கும் இவர்கள், மத்திய அரசை வலியுறுத்தி இனியும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் இரத்தம் சிந்துவதை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற ஒரு அறிக்கை கொடுத்தால் கூட போதும். அந்த அறிக்கையை கூட வெளியிட இவர்கள் தயாராக இருக்கவில்லை. இவர்கள் மக்களை ஏமாற்றிகொண்டிருகின்றார்கள். இவர்களை இனியும் நாம் நம்பத் தயாராக இல்லை. வீரப்பனால் பலர் கடத்தப்பட்டபோது கடத்தப்பட்டவர்களுக்காக எத்தினை முயற்சிகள் எடுக்கப்பட்டது? ஆனால் தமிழக மீனவர்கள் மீது எந்த அக்கறையும் எடுக்கவில்லை. அப்படி பார்க்கும் போது தமிழக அரசு அரசியல் இலாபத்துக்காக பத்திரிகைக்கு அறிக்கை தருவதோடு நின்று விடுகிறார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது


செய்தியாளர்: மீனவர்கள் தங்கள் மீது அத்துமீறல்களை செய்வது சிறீலங்கா கடற்படை என கூறுகின்றார்கள். ஆனால் ஊடகங்கள், தமிழகத்தில் இருந்துவரும் ஊடகங்கள் முக்கியமாக இந்து பத்திரிகை எந்த சம்பவமாக இருக்கட்டும் மீனவர்கள் எந்தவிதத்தில் தாக்கப்பட்டாலும் உடனடியாக விடுதலை புலிகளை குற்றம் சாட்டி வருகின்றது. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைகின்றீர்கள்?

கோமஸ்
: மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என எடுத்துக்கூற கூடியவர்கள் மீனவர்களாகத்தான் இருக்க முடியும். இந்தியாவில் இருக்கும் பத்திரிகைகளும் சரி, அரசியல் கட்சிகளும் சரி, அவர்கள் எடுக்கும் அரசியல் நிலைபாட்டை வைத்து கொண்டு கதையை புனைந்து கொண்டு இருகின்றார்கள். நாம் பார்த்து வருகின்றோம், 83 முதல் மீனவர்களை விடுதலை புலிகள் தாக்கியதாகவோ கடத்துவதாகவோ தமிழக மீனவர்களுக்கு எதிரிகளாக இருப்பதாகவோ எந்த தகவலும் இல்லை. அவர்களும் தமிழர்கள், நாமும் தமிழர்கள். அந்த உறவுதான் இருகின்றது. இந்த நிலையில் இலங்கை கப்பற்படையானது தமிழக மீனவர்களை தக்கியதாக பல்வேறு வழக்குகள் இருகின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வழக்குகள் இருகின்றன. விடுதலை புலிகள் கொன்றதாக எந்தவித செய்திகளும் இல்லை. இப்போதுதான் இலங்கையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை வைத்து புலிகளை இந்திய அரசுக்கு எதிரிகளாக மாற்ற வேண்டும், இந்திய அரசை தமிழர்களுக்கு எதிராக திருப்பவேண்டும் என அங்கு அவர்கள் நாடகமாடுகின்றார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கையை ஏற்றுகொள்ள மத்திய அரசில் ஆட்கள் இருகின்றார்கள். மத்திய அரசு சொல்கின்ற போது இங்கு தமிழகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே ராஜீவ் காந்தியின் கொலை குற்றச்சாட்டில் சேரக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக அதனை ஏற்று கொள்கின்றார்கள். புலிகளை பொறுத்தவரையில் தமிழக மீனவர்களை பகைத்து கொள்வதற்கோ தமிழர்களை பகைத்து கொள்வதற்கோ இது தருணமல்ல. அவர்கள் அப்படியும் நினைக்கபோவதில்லை. அவர்களுக்கு தமிழகத்தின் ஆதரவு வேண்டும். இந்தியாவின் ஆதரவு வேண்டும். அந்த ஆதரவு இல்லாவிட்டாலும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுவார்கள். படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் அந்த படகில் இருந்தவர்கள் சிங்களம் பேசியதாக சொன்னார்கள். இந்தவகையில் பார்க்கும் போது எமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் புலிகள் அல்ல. அது இலங்கை கப்பற் படையோ அல்லது சிங்கள தீவிரவாத குழுக்களோ எனத்தான் எண்ணத் தோன்றுகின்றது. கடத்தப்பட்ட மீனவர்களை விடுவிக்க இந்திய அரசோ தமிழக அரசோ எந்தவித முயற்சியையும் செய்யவில்லை. மாறாக விடுதலைப்புலிகள்தான் கடத்தியதாக இவர்கள் கொடுத்த அறிக்கைகள் எமக்கு அச்சத்தை கொடுத்தது. கடத்தப்பட்ட மீனவர்களை கொன்று புலிகள்தான் கொன்றார்கள் என சொல்லி விடுவார்களோ என அச்சமடைந்தோம். இலங்கையில் இருந்த தமிழ் மீனவ தலைவர்களும் நாமும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வந்தோம் அவர்களை விடுவிக்க. இவர்கள் சொல்லிய தகவல்கள் முன்னுக்கு பின்னாக முரணாக இருந்ததே அன்றி வேறென்றும் இல்லை. ஒரு படகில் இலங்கையில் இருந்த மீனவர்களை பிடித்து வைத்திருப்பதாக சொன்னார்கள். தூத்துகுடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த படகை பார்த்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் சொல்கிறார்கள் அந்த படகு இல்லை என. இது நடந்து 3 நாட்களிலே சென்னையில் கியு பிராஞ் சொல்கின்றது இவர்கள்தான் என. இதை அரசியல் ஆதாயமாகவே கருதுகின்றோம். இந்து போன்ற பத்திரிகைகளுக்கு அவர்கள் சார்ந்த ஒரு அரசியல் நிலை இருகின்றது. அந்தவகையிலே புலிகளை கொச்சைப்படுத்துவதில் முனைப்பாக இருகின்றார்கள் எனத்தான் நான் கருதுகின்றேன்

செய்தியாளர்
: பதட்டம் பரபரப்பு எல்லாம் அடங்கி விட்ட நிலையில் மீண்டு வந்த மீனவர்கள் தம்மை கடத்தியது யாரென ஏதாவது கூறி இருகின்றார்களா? ஏனெனில் பத்திரிகைகளை சந்திக்கும் போது அவர்கள் புலிகள்தான் தம்மை கடத்தியதாக சொல்லி இருந்தார்கள்?

கோமஸ்: அவர்களிடம் பேசுகின்ற போது அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் அந்த மீனவர்கள் அப்பாவிகள். விசயம் தெரியாதவர்கள். இவர்களிடையே புலிகள்தான் தம்மை கடத்தியதாக நம்பவைக்கப்பட்டிருகின்றது. அவர்களிடம் ஆரம்பம் முதல் கடைசி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை கேட்கும் போது அவர்கள் சொன்னார்கள், எங்களது படகில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது ஒரு படகில் வந்தார்கள,; வந்தவர்கள் பார்த்துவிட்டு திரும்பி சென்றார்கள், பின் திரும்ப வந்து நீங்கள் புலிகளுக்கு டீசல்தானே கடத்துகிறீர்கள் என சொல்லிவிட்டு எம் படகில் ஏறினார்கள். பின் அவர்களை துப்பாக்கி முனையில் கடத்திகொண்டு போய் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு இடமாக இவர்களை மாற்றி மாற்றி வைத்திருந்திருகிறார்கள். அவர்களிடம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையும் மற்ற விசயங்களையும் காட்டி விடுதலைபுலிகள் என ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த நிலையில் பார்க்கும் போது விடுதலைப் புலிகள்தான் கடத்தியதாக இலங்கை அரசு சொல்கின்றது, இந்திய அரசு சொல்கின்றது, தமிழக காவல்துறை சொல்கின்றது. இந்த நிலையில் புலிகள் நாங்கள் இல்லை என சொல்கின்றார்கள். இதனை இவர்களிடம் தெரிவித்ததன் மூலம் அந்த மீனவர்களிடம் புலிகள்தான் கடத்தியதாக ஒரு மாயையை உண்டாக்கி இருந்திருக்கலாம். மீண்டும் இவர்களை அனுப்பும் போது இவர்களிடம் சொல்லி இருகின்றார்கள், நாங்கள் விடுதலைப் புலிகள்தான் உங்களை கடத்தி வைத்திருந்தோம் என ஊரில் போய் சொல்லுங்கள் என சொல்லி இருகின்றார்கள். இவர்கள் இங்கு வந்து புலிகள்தான் கடத்தினார்கள் என சொல்லிய பின் புலிகள் தம் இணைய தளத்தில் தாம் கடத்தவில்லை என மறுத்து இருகின்றார்கள். புலிகள்தான் கடத்தி இருப்பார்களானால் நீங்கள் அங்கு போய் சொல்லுங்கள் விடுதலைபுலிகள்தான் கடத்தினார்கள் என சொல்ல சொல்லுவார்களா? இது அறிவு பூர்வமான விசயமா? இதன் மூலம் விடுதலை புலிகள் மீது தப்பான எண்ணத்தை பரப்ப சதி நடந்திருகின்றது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருகின்றார்கள்

செய்தியாளர்: இந்திய இலங்கை கூட்டு ரோந்து என்னும் எண்ணக்கரு தற்போது எடுக்கப்படுகின்றது இவ் நடவடிக்கையானது இந்திய மீனவர்களை பாதுகாக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா?

கோமஸ்: நீங்கள் பயனளிக்குமா என கேட்டதை விட தமிழக மீனவர்களுக்கு பாதிப்பாக இருக்குமா என கேட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். இந்திய இலங்கை கூட்டு ரோந்தானது எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. அண்மையில் நடைபெற்ற கடத்தல் கொலை நிகழ்வுகள் இந்திய இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை நிறைவேற்ற செய்யப்பட்ட சதியாகவே நாம் கருதுகின்றோம். புலிகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த சதிவேலையை இலங்கை செய்து வருகின்றது. இவ்வளவு காலமும் படகுகள் மூழ்கடிக்கும் போதும் கொலை செய்யப்படும் போது இந்திய கப்பற்படை என்ன செய்து கொண்டிருந்தது? ஆகவே கூட்டு ரோந்து என்பதை ஏற்று கொள்ள முடியாதது

செய்தியாளர்
: தமிழக மீனவர்களை நீங்கள் மீனவர் சங்கத்தலைவர் என்ற முறையில் சந்தித்திருப்பீர்கள் என்ற வகையிலும் இலங்கையில் தமிழ் மக்கள் படும் இன்னல்களையும் விடுதலை போராட்டம் பற்றியும் எவ்வளவு விபரங்களை அறிந்து வைத்திருகின்றார்கள்?

கோமஸ்: தமிழக மீனவர்கள் தமிழீழ போராட்டத்துக்கு ஆதரவாகாத்தான் இருகின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக எம்மால் சிந்திக்க முடியாது. தமிழீழத்தில் பலத்த இன்னல்களுக்கு பிறகு தமிழீழம் தவிர்க்கமுடியாது என்ற நிலையில் பலத்த இன்னல்களுக்கிடையில் போராடி வருகின்றார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம், பல்வேறு விடுதலை இயக்கங்களை ஆதரித்த இந்திய அரசு ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை கருத்தில் கொண்டு பிரபாகரன் மீதுள்ள கோபத்திலே ஒட்டு மொத்த போராட்டத்தை நசுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றது எனத்தான் தமிழக மீனவர்கள் கருதுகின்றார்கள். தமிழக மீனவர்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு எதிராக சிந்திக்க மாட்டார்கள்

செய்தியாளர்: இறுதியாக தமிழீழ மீனவர்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் அகில இந்திய மீனவ சங்க தலைவர் என்ற ரீதியில் என்ன செய்தியை தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

கோமஸ்: விடுதலை போராளிகளுக்கு சொல்லி கொள்வது உங்கள் இலட்சியம் வெற்றி பெற சுதந்திர தமிழீழம் காண எங்கள் வாழ்த்துக்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசுகள் என்ன சொன்னாலும் தமிழக மீனவர்கள் உங்களோடு இருகின்றார்கள் என்ற உணர்வோடு உங்கள் தொப்புள் கொடி உறவு என்ற உணர்வோடு செயல்படவேண்டும். நாங்களும் அதே உணர்வோடு இருப்போம் என செய்தியை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்

3 comments:

thamillvaanan said...

மறவன் உங்கள் அனைத்து பதிவுகளும் வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

இந்த குறிப்பிட்ட பேட்டியை நீங்கள்தான் தட்டச்சு செய்தீர்களா?

அன்புடன்
தமிழ்வாணன்

மாறன்(maran) said...

நன்றி அண்ணா ஆம் இந்த பேட்டியை நாந்தான் தட்டச்சு செய்தேன் இன்னொரு இணையத்துக்காக[webeelam]

அன்புடன்
மறவன்

Kanags said...

மறவன், தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.